தண்ணீர் வசதி இல்லாத சம்பா வயல்களில் என்ன செய்யலாம். தண்ணீர் வசதியுடைய சம்பா தாளடி வயல்களில் என்ன செய்யலாம் என்று நினைக்கும்போது எல்லோர் மனதிலும் எழுவது உளுந்து, பயறு சாகுபடியே.
எனவே இப்போதே உளுந்து, பயறு சாகுபடி செய்ய திட்டமிடுபவர்கள் விதை சேகரித்தலில் முனைந்து செயல்படவும். உங்களிடம் விதை சேமிப்பு வைத்திருந்தால் நல்லது இல்லாவிடில் உங்கள் ஊர் அல்லது அருகில் உள்ள ஊரில் அதிகம் விதை வைத்திருப்பவர்களிடம் கேட்டு வாங்கி சேகரித்துக் கொள்ளுங்கள்.
இதை விடுத்து தனியார் கடைகளிலோ அல்லது உங்கள் ஊருக்கே வெளியூரிலிருந்து லாரியின் வாயிலாக கொண்டுவந்து விற்பவர்களிடம் விதையை வாங்கி சென்ற ஆண்டில் கும்பகோணம் பகுதியில் விதை முளைக்காமலும், முளைத்த விதை பூக்காமலும் பூத்தது, காய்க்காமலும் போனது போல் பெருத்த இழப்பிற்கு ஆளாகாதீர்கள்.
தண்ணீர் வசதியில்லாத சம்பா வயல்களில் எந்தெந்த வயல்களில் இயந்திரம் கொண்டு அறுவடை செய்கின்றீர்களோ, அந்த வயல்களில் நஞ்சைத் தரிசில் உளுந்து, பயறு சாகுபடி செய்வதை தவிர்த்திடலாம்.
ஏனெனில் இயந்திரங்கள் வயலில் இறங்கி அறுவடை செய்யும்பொழுது விதைத்த விதைகள் பெரும்பாலும் சேதமடைய வாய்ப்புள்ளது என்பது பல விவசாயிகளின் அனுபவமாகும்.
எனவே உங்கள் வயலில் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இயந்திரம் இல்லாமல் ஆள் கொண்டு அறுவடை செய்ய இருக்கக்கூடிய வயல்களில் அவசியம் நஞ்சைத்தரிசில் உளுந்து, பயறு சாகுபடி செய்திட திட்டமிடுங்கள்.
தண்ணீர் வசதியுள்ள சம்பா, தாளடி வயல்களில் இறவை உளுந்தாக டி-9 அல்லது, ஆடுதுறை-5, வம்பன்-6 ஆகிய இரகங்களை சித்திரைப்பட்டத்தில் சாகுபடி செய்து நல்ல மகசூல் பெறலாம்.