நிலக்கடலை பயிரை இரவில் மட்டும் தாக்கி பெரும் சேதத்தை உண்டாக்கும் ஒரு வகை புழுக்கள் தான் “புரோடினியா புழுக்கள்”.
புரோடினியா புழுக்கள்
புரோடினியா புழுக்கள் பகல் முழுவதும் சூரிய வெப்பம் தாங்க முடியாமல் மண்ணுக்குள்ளும், நிழலிலும் கண்ணுக்கு தெரியாமல் பதுங்கி கொள்ளும். இரவில் வெளியில் வந்து நிலக்கடலை பயிரின் இலைகளை சுரண்டி அதன் பச்சையத்தை தின்றுவிடும். இதன் மூலம் நாளடைவில் செடியின் ஆரோக்கியம் பாழ்பட்டு மகசூல் பெரிதும் பாதிக்கும்.
இவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள்:
** இப்புழுக்களை கட்டுப்படுத்த நிலக்கடலை சாகுபடி செய்யும்போது ஆமணக்கு பயிரினை வரப்பு பயிராகவோ, ஊடுபயிராகவோ சாகுபடி செய்தால் புழுக்களின் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
** விளக்கு பொறி அல்லது இனக்கவர்ச்சி பொறியினை வயலில் வைத்தும் தாய் அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தும் அழிக்கலாம்.
** முட்டை குவியல்களையும், ஓரே இலையில் கூட்டமாய் இருக்கும் இளம் புழுக்களையும் சேகரித்தும் அழிக்கலாம்.
** இது தவிர நச்சு உருண்டை தயாரித்தும், இந்த புழுக்களை அழிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 5 கிலோ அரிசித்தவிடு, நாட்டு சர்க்கரை அரை கிலோ மற்றும் கார்பாரில் 50 சத நனையும் தூள் அரை கிலோ ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வரப்பு ஓரங்களிலும், வயலை சுற்றியும், வயலில் தெரியும் வெடிப்பு மற்றும் பொந்துகளிலும் மாலை வேளைகளில் ஆங்காங்கே வைத்துவிட வேண்டும். மாலையில் வெளிவரும் புழுக்கள் உருண்டையின் வாசனையினால் கவரப்பட்டு அதனை தின்ன முயற்சித்து அழிந்து போகும்.