ஆயிரம் அடி போர் போட்டோம் ஆனா, தண்ணி கிடைக்கலை’ங்கறதுதான் எங்க பார்த்தாலும் பேச்சா இருக்கு. ஆனா, 'கிணறு வெட்டினோம். தண்ணி இல்லை’னு சொல்றதைக் கேட்கறது அரிதா இருக்கும். காரணம், போர் போடற மாதிரி, கிணறு வெட்டுற சமாச்சாரம் அத்தனை ஈஸியா இருக்காது.
கிணறு வெட்டுற வேலை ஒரு கூட்டுமுயற்சி. மாசக்கணக்குல வேலை செய்யணும். பத்து பேருக்கு மேல வேலை செய்யணும். சின்ன தவறு நடந்தாலும், ஒட்டுமொத்த வேலையும், வீணாகிடும். அதனால, கிணறு வெட்டுறதுக்கு முன்ன பல முன்னேற்பாடுங்க நடக்கும்.
நம்ம முன்னோருங்க அதுக்கு பல சூத்திரங்களைச் சொல்லி வெச்சிருக்காங்க. அந்த சூத்திரப்படி கவனிச்சி கிணறு தோண்டினா... நிச்சயம் நல்ல கிணறு அமையும்னு சொல்றாங்க. இந்த வறட்சியான நேரத்துல, இப்படி ஒரு விஷயத்தை எல்லாரும் தெரிஞ்சி வெச்சிக்கிறது நல்லதுதானே!
கிணறு தோண்டறதுக்காக நீங்க தேர்வு செய்திருக்கிற இடத்துல பல வகையான பசுமையான புல்லுங்க முளைச்சிருந்தா... அந்த இடத்தை விட்டுப்புடாதீங்க. அதுதான் சரியான இடம். ஏன்னா, இப்படி பசுமையான புல் உள்ள இடத்துல குறைந்த ஆழத்துல தண்ணி கிடைக்குமாம்.
சரி, தண்ணி கிடைச்சிருது. நல்ல சுவையான தண்ணியா இருந்தாத்தானே, பயிரும் நல்லா வளரும். ஆடு, மாடுங்களுக்கும், மனுஷன்களுக்கும் தாகத்தைத் தணிக்கும். ஆக, 'சுவையான தண்ணி அந்த இடத்துல கிடைக்குமா?’னு பார்க்க அடுத்த கட்டமா ஒரு வேலை செய்யுங்க. அரை கிலோ நவதானியத்தை ரவை மாதிரி உடைச்சி, கிணறு தோண்டப்போற இடத்துல முதல் நாள் சாயங்காலம் தூவி விடுங்க.
மறுநாள் காலையில பார்த்தா, அந்த இடத்துல எறும்புங்க மொய்ச்சிட்டு இருக்கும். அங்க சுவையான தண்ணி இருந்தா, எல்லா எறும்புகளும் அங்கயே புத்து உருவாக்கி, உள்ள போய் தானியத்தை சேகரிக்கும். அந்த இடத்துல கிணறு தோண்டிட வேண்டியதுதான்.
அங்க நல்ல தண்ணி இல்லைனா... நவதானிய ரவையை எடுத்துக்கிட்டு, தண்ணி இருக்கற இடம் நோக்கி, எறும்புங்க பயணம் செய்யும். அந்த இடத்தைக் கண்டுபிடிச்சி, அங்க கிணறு வெட்டலாம். இதெல்லாம் நம்ம முன்னோருங்க கடைப்பிடிச்ச தொழில்நுட்பங்கள்தான்.