கால்நடைகளை வைத்துள்ள விவசாயிகள் கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அதிலும், சில முதலுதவிகளை தெரிந்து வைத்துக் கொண்டு அவற்றை கால்நடை மருத்துவர் வருவதற்குள் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மேற்கொள்வதால் அவற்றின் வேதனையைக் குறைத்து, பாதிப்பு மேலும் தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
1.. காயங்கள்
கால்நடைகளுக்கு காயம் உள்ள பகுதிகளை பொட்டாசியம் பெர்மங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.
பின்னர் போரிக் பவுடர் அல்லது வேப்பெண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்த களிம்பை காயம் ஆறும் வரை தடவி வர வேண்டும்.
சில சமயங்களில், நம்முடைய கவனக்குறைவால், புண்கள் மீது ஈக்கள் அமர்ந்து முட்டையிடும். இதனால் புண்களில் புழுக்கள் உண்டாகிவிடும். இதற்கு, புழுக்களை முடிந்த அளவு கையால் எடுத்துவிட்டு, பொட்டாசியம் பெர்மாங்;கனேட் கலந்த நீரைக் கொண்டு நன்கு கழுவிய பின்னர் டர்பண்டைன் எண்ணேயில் நனைத்த துணியை புண்ணில் வைத்துவிட வேண்டும்.
அடுத்த நாள், துணியை எடுத்துவிட்டு காயத்தைக் கழுவிய பின்னர் வேப்பெண்ணெய், மங்சள் கலந்த களிம்பை, புண் ஆறும் வரை தடவி வரவேண்டும்.
2.. கண்ணில் நீர் வடிதல்
தூசி, முள் மற்றும் விதைகள் கண்ணில் விழுந்தால், எரிச்சல் உண்டாகி கண்ணில் நீர் வடியும், கண்ணில் நீர் வடிதலை நிறுத்துவதற்கு சுத்தமான விளக்கெண்ணெய் இரண்டு துளி கண்ணில் விட வேண்டும்.
இதனால் எரிச்சல் குறைந்து நீர் வடிவது குறையும். கண் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால், கால்நடை மருத்துவர் வரும் வரை கண்ணை சுத்தமான துணியினால் மூடி வைத்திருக்க வேண்டும்.
3.. குளம்புக் காயங்கள்
பாதிக்கப்பட்ட குளம்புப் பகுதியை நீர்; கொண்டு நன்கு கழுவி, குளம்பின் அடிப்பாகத்தினை நன்கு சோதிக்க வேண்டும். ஆணி, முள், கண்ணாடி துண்டு மற்றும் இது போன்றவை குளம்பில் குத்தியிருந்தால் அவற்றைக் கவனமாக அகற்ற வேண்டும்.
அப்பகுதியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். பின்பு அதன் மீது போரிக் பவுடர் அல்லது வேப்பெண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்த களிம்பை புண் ஆறும் வரை தடவி வர வேண்டும்.
4.. மடி காம்புகளில் காயம்
மடி மற்றும் காம்புகளில் ஏற்படும் புண்கள் மூலமாக கிருமிகள் மடிக்குள் நுழைந்து மடி நோயை ஏற்படுத்தி அதிக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனைத் தடுப்பதற்கு காயங்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.
பின்னர் போரிக் பவுடருடன் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் குழப்பி அந்தக் களிம்பைக் காயங்கள் மீது தடவி வர வேண்டும்.
கால்நடைகளுக்கு ஏற்படும் இந்த பிரச்சனைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு நீங்களே கூட வைத்தியம் பார்க்கலாம்.