முயல்களின் தீவனத் தேவை
முயல்களின் ஊட்டச்சத்துக்கள் அதன் வயது மற்றும் உற்பத்தித் திறனைப் பொறுத்தே அமையும். சிறந்த வளர்ச்சியைப் பெற முயலின் வயதையும் உட்கொள்ளும் திறனையும் பொறுத்து உணவளித்தல் வேண்டும்.
undefined
பொதுவான ஒரு வகை உணவையே அனைத்து முயல்களுக்கும் கொடுக்க வேண்டும். நல்ல இலாபம் ஈட்ட முயல்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு வகைத் தீவனமும், பால் உற்பத்தியை அதிகரிக்க ஒரு வகைத் தீவனமென இரண்டு வகைகளைப் பின்பற்றுதல் நன்று.
வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்கள்
குட்டிகளுக்கான வளர்ச்சிக்கெனப் பல உயிர் மற்றும் புரதச்சத்து நிறைந்த தீவனம் அளிக்கவேண்டும். இத்தீவனம் வயது அதிகரிக்க அதிகரிக்க அளவு குறையும். உட்கொள்ளும் தீவனத்தை விட அதிகமாகவே வளர்ச்சியடையும் குட்டிகளுக்கான தீவனம் அதிக விலையாக இருக்கும் பட்சத்தில் எளிய தீனிகளை நாமே தயாரித்து அளிக்கலாம்.
தாயிடமிருந்து குட்டிகளைப் பிரிக்கும் போது அளிக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கள்
தாயிடமிருந்து குட்டி முயல்களைப் பிரிக்கும் 30-45வது நாளில் அதன் தீவனம் பாலில் இருந்து திட நிலையிலுள்ள தீவனங்களுக்கு மாறுகிறது. அப்போது அதிக நார்ச்சத்து மிகுந்த ஸ்டார்ச் குறைந்த தீவனம் அளிக்கவேண்டும்.
அதன்பின் இரண்டு வாரங்கள் கழித்து அதன் செரிக்கும் தன்மை அதிகரிக்கும் போது நல்ல ஸ்டார்ச் சத்து நிறைந்த தீவனங்களை அளிக்கலாம். நல்ல உற்பத்தித் திறன் பெற நன்கு செரிக்கக்கூடிய அதிக கார்போஹைட்ரேட் அடங்கிய தீவனங்கள் கொடுத்தல் வேண்டும்.
சினைத் தருணத்தில் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள்
சினைத்தருணத்தில் அதிக புரதம், ஆற்றல், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. நல்ல உற்பத்திக்குக் குறைந்தது 18 சதவிகிதம் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தேவை. பெண் முயல்கள் அடிக்கடி கருத்தரித்து குட்டி ஈன்று கொண்டே இருப்பதால் இவற்றுக்கு அதிக கால்சியம், பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. குட்டிகளுக்குப் பாலூட்டவும் அதிக சத்துக்கள் தேவைப்படுகிறது.
அதே சமயம் குட்டிகள் நீண்ட நாள் பாலூட்ட அனுமதித்தால் அவைகள் குண்டாகி ஏதேனும் நோய் ஏற்படலாம். குட்டி ஈன்ற 21 நாட்களில் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.பிறகு குறைய ஆரம்பித்து விடும். அடுத்த சினை தரித்தவுடன் பால் சுரப்பு நாளங்கள் மீண்டும் அதன் வேலையைத் துவக்கிவிடும்.
ஊக்க உணவுகள்
சிறிய அளவிலான முயல் வளர்ப்புப் பண்ணைகளில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வைக்கோல், தேர்ந்தெடுக்கப்பட்ட பசும்புல் மற்றும் இதர தீனிகள் அளிப்பதே போதுமானதாகும். அதிக புரதம் மற்றும் ஆற்றல் கொண்ட தீவனங்கள் சிறிதளவு அளிக்கலாம்.
தீவன அட்டவணை
நாளொன்றுக்கு 100 கிராம் புற்களும், 200-250 கிராம் சமச்சீரான தீவனம் ஒரு சினை முயலுக்கு அவசியம் ஆகும்.
உட்கொள்ளும் உணவு
தினசரி உட்கொள்ளும் உணவு அதன் உடல் எடையில் 5 சதவிகிதம் ஆகும். அதே போல் முயலானது தனது உடல் எடையில் 10 சதவிகிதம் அளவு நீர் அருந்தும். சினை முயல்களுக்கு இந்த அளவு மேலும் அதிகரிக்கும். முயல் வளர்ப்பில் சரியான அளவு தீவனங்கள் மற்றும் தூயநீர் வழங்குதல் அவசியம் ஆகும்.
முயல்களின் உணவூட்டம்
குட்டிகள் பிறந்த முதல் 15-21 நாட்களுக்கு பால் மட்டுமே அவைகளுக்கு உணவு. எனவே குட்டிகள் அனைத்தும் நன்கு பால் குடிக்கின்றனவா என்பதைக் கவனித்துக் கொள்ளல்வேண்டும். இல்லையனில் நன்கு பால் குடிக்கும் குட்டிகள் நன்றாக வளரும். பால் ஊட்டத் தெரியாத குட்டிகள் இறந்துவிடும். இந்தச் சூழ்நிலையில் தாய் முயலில் பால் ஒழுங்காக சுரக்கிறதா எனப்பார்த்து அதற்கேற்ப தீவனமும் நீரும் அளித்தல்வேண்டும்.
15-21 நாட்களிலிலேயே குட்டிகளுக்குச் சிறிது சிறிதாக புற்கள், தீனிகளை கொறிக்கச் செய்து பழக்க வேண்டும். 21 நாட்களுக்குப் பின் குட்டிகள் பாலை குறைத்துக் கொண்டு தீனிகளைக் கொறிக்க ஆரம்பித்து விடும். தாயிடமிருந்து பிரிக்கும் காலங்களில் இருந்தே பசும்புற்கள், காய்கறிகள் மற்றும் அடர் தீவனங்கள் அளிக்கவேண்டும்.
உணவளிக்கும் நேரம்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சரியான இடைவெளிவிட்டு உணவளித்தல் நலம். அடர் தீவனங்களை காலை 7.00 மணி மற்றும் மாலை 5 மணிக்கும் அளிக்கலாம். பசும் புற்களை மாலை நேரங்களில் அவை மிகச்சுறுசுறுப்பாக இருக்கும் நேரங்களில் அளிக்கலாம். உணவானது புதிதாகவும், எந்த குப்பை, அழுக்கின்றி சுத்தமானதாகவும் இருக்கவேண்டும்.
உணவளிக்கும் போது கவனிக்க வேண்டியவை
1.. சுத்தமான, புதிய புற்கள் அல்லது பயறு வகைத் தாவரக் கழிவுகளை முயலுக்கு உணவாகக் கொடுக்கலாம் (70 சதவிகிதம்).
2.. இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தும் ஆண், பெண் முயல்களுக்கு 50 சதவிகிதம் பயறு வகைத் தாவரங்களும் 50 சதவிகிதம் புற்களும் சேர்ந்த உணவு மிகவும் ஏற்ற மலிவான தீவனமாகும்.
3.. அடர் தீவனத்தில் சிறிது நீர் விட்டுக் கூழாக்குவதன் மூலம் அது பறந்து வீணாவது குறைக்கப்படுகிறது.
4.. முயல்கள் புளித்துப் போனதை விரும்புவதில்லை. எனவே அவ்வகை உணவு அல்லது தீவனங்களை தவிர்ப்பது நல்லது.
5.. தூய, குளிர்ந்த நீர் எல்லாச் சமயங்களிலும் கிடைக்குமாறு செய்தல் வேண்டும்.
6. குட்டி ஈன்றவுடன் தாய் முயலுக்குத் தீவனம் அதிகமாக அளித்தல் கூடாது.குட்டி பிறந்த 5-7 நாட்கள் கழித்து தான் தாய் முயலின் தீவனத்தை அதிகப்படுத்தவேண்டும்.
7.. தீவனத்தில் திடீரென எதையும் புதிதாகச் சேர்த்தோ, நீக்கியோ மாற்றங்கள் செய்யக்கூடாது.
8.. ஐந்து சதவிகிதம் கரும்புக் கழிவுகளை சேர்த்துக் கொடுக்கலாம்.
9.. அதிக அளவு கலப்புத் தீவனம் கொடுப்பதை விட சிறிது வைக்கோல் அல்லது புல் சேர்த்துக் கொடுப்பதால் குட்டிகள் உட்கொள்ளும் அளவு அதிகமாக இருக்கும்.
10.. ரேப்சீடு எண்ணெய்க் கழிவுகளை தீவனத்தில் சேர்க்கும் முன் சிறிது சூடு செய்தல் நலம். மேலும் இது 15 சதவிகிதம் அளவு மட்டுமே தீவனத்தில் இருக்கவேண்டும்.
11. உணவில் கால்சியம் சிறிதளவே இருக்கவேண்டும். அதிகளவு கால்சியம் சினை முயலின் வயிற்றுக் குட்டிகளைப் பாதிக்கும். ஆகையால் சரியான அளவே பயன்படுத்த வேண்டும்.
12.. இனச்சேர்க்கையில்லாத காலங்களில் ஆண், பெண் முயல்களுக்கு நாளொன்றுக்கு 100-120 கிராம் உருளைத் தீவனமளிக்கலாம்.
13.. வளரும் குட்டிகள், சினை முயல்களுக்கு தானியங்கள் அல்லது உருளைத் தீவனங்களை சிறிது இடைவெளிவிட்டு அவ்வப்போது அளிக்கவேண்டும்.
14.. நல்ல தரமான பயறு வகைத் தாவரங்களையும், அதன் கழிவுகளையும் தீவனமாக அளிக்கலாம்.
15.. கேரட், பசும்புற்கள், முள்ளங்கி. லியூசர்ன், பெர்சீம் போன்றவை சதைப்பற்று மிகுந்த முயலுக்கு உகந்த தீவனமாகும். மேலும் சமையல் கழிவுகள், கெட்டுப்போன பால், உடைந்து அழுகிய பழங்கள் போன்ற வீணாகும் பொருட்களையும் முயல்களுக்குக் கொடுக்கலாம்.