கவாத்து
கவாத்து என்பது பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தும் முறையாகும். கவாத்து மரம் மற்றும் செடிகளுக்கும் பொதுவான ஒன்று. கவாத்து செய்வதன் மூலம் புதிய கிளைகள் மற்றும் பூ மொட்டுகளை துளிர்க்கச் செய்ய முடியும். இதனால் அதிக அளவில் மற்றும் புதிய கனிகள் மற்றும் மலர்களை தருவிக்க முடியும்.
கவாத்து செய்வதன் மூலம் தேவையற்ற கிளைகளை அப்புறபடுத்தி முழு ஊட்டச்சதுகளையும் வீணாகாமல் பயிர்களுக்கு அளிக்கமுடிகிறது. அதோடு பயிர்கள் மற்றும் மரங்களிடையே நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுகிறது. இதனால் மகரந்த சேர்க்கை எளிதாகவும் அதிகமாகவும் நடைபெற்று மகசூல் அதிகரிக்கப்படுகிறது.
கவாத்து செய்யப்பட்டு நீக்கப்பட்ட கிளைகள் மற்றும் இலைகளை நாம் மக்க வைத்து இயற்கை உரமாக பயன் படுத்தலாம். ஏனெனில் ஒரு மரத்திற்கு அல்லது செடிக்கு தேவைப்படும் ஊட்டச்சத்து மட்டுமே அது கிரகித்து அதன் பாகங்களில் வைத்திருக்கும்.
நாம் கவாத்து செய்யப்பட்ட கிளை மற்றும் இலைகளை அப்புறபடுத்தினால் ஊட்டச்சத்துக்கள் வீணாகும் நிலை ஏற்படும்.
கவாத்து செய்வது எப்படி?
கவாத்து பூவெடுக்கும் தருணங்களில் பார்த்து செய்யவேண்டும். சில மரவகைகளை நாம் முழுவதும் கவாத்து செய்யலாம். உதாரணத்துக்கு முருங்கை மரம். முருங்கை மரம் முழுவதும் கவாத்து செய்யப்பட்டாலும் உடனடியாக நன்றாக வளர்ந்துவிடும்.
ஆனால் சில வகை மரங்களில் நாம் குறிப்பிட்ட அளவு மட்டுமே கவாத்து செய்யவேண்டும். இல்லையென்றால் மரம் பட்டுபோக வாய்ப்பு உள்ளது. முதலில் தேவை இல்லாத கிளைகளை கவாத்து செய்யவேண்டும்.
அதன் பிறகு தேவையான அளவு கிளைகளை விட்டுவிட்டு நன்றாக காற்றோட்ட வசதி ஏற்படுமாறு கவாத்து செய்ய வேண்டும்.
எப்போது கவாத்து செய்யகூடாது?
1.. மரம் அல்லது செடி நோய் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் போது செய்யகூடாது.
2.. போதுமான அளவு நீர் இல்லாத சமயங்களில் செய்யகூடாது.
3.. பருவ காலங்களில் பூ வைத்த பிறகு கவாத்து செய்யகூடாது.
4.. பூ வைப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு செய்யகூடாது. ஏனெனில் அப்படி செய்யும் போது அதிக அளவில் மீண்டும் தேவையற்ற கிளைகள் வளர்ந்துவிடும்.