நமது நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக ஒரு சதவீதம் என்ற அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கால்நடைகளிருந்து முழுமையான பலனை பெற வேண்டுமென்றால், அவற்றுக்கு சரிவிகித முறையில் தீவனம் இடவேண்டும்.
ஆனால் எண்ணிக்கையில் அதிகரிக்கும் கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தில் 60 சதவிகிதம், உலர்ந்த நார்த்தீவனத்தில் 60 சதவிகிதம், கலப்பு தீவன வகைகளில் 60 சதவிகிதம் மட்டுமே உற்பத்தி செய்கிறோம். இதனால் ஊட்டசத்து குறைபாடு ஏற்படுகிறது.
இந்த பற்றாக்குறையை போக்க நாட்டிலுள்ள தரிசுநிலங்களை தீவன உற்பத்திக்காக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இந்த இடங்களில் தீவன மரங்களை வளர்க்க வேண்டும்.
தானிய வகை தீவனங்களான மக்காச்சோளம், புல்வகை தீவனங்களான கொழுக்கட்டை புல், பாரா, பயறு வகை சேர்ந்த ஸ்டைலோ, தட்டைப்பயிறு, வேலிமசால், சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை சாகுபடி செய்யலாம்.
பொதுவாக தீவனமரங்களின் இலைகளில்20 முதல் 40 சதவிகிதம் உலர்பொருளும், 12 முதல் 32 சதவிகிதம் வரை புரதச்சத்தும் உள்ளன.
செரிமான புரதச்சத்தும் 60 முதல் 65 சதவிகிதமாக உள்ளது. குறிப்பாக மர இலைகள் தீவனமாக அகத்தி, கிளைரிசிடியா, சவுன்டால், கொடுக்காப்புளி, வாகை, முள்ளு முருங்கை போன்ற மரங்களை பயன்படுத்தலாம். இவை தவிர அன்றாடம் கிடைக்கக்கூடிய அரசமரம், ஆலமரம், மா, பலா, வேம்பு, நுணா, பூவரசு, முருங்கை, உதியன், மந்தாரை, கருவேல் போன்ற மரத்தழைகளை தீவனமாக அளிக்கலாம்.
மர இலைகளில் பிற தீவனப்புற்களில் இருப்பதை விட குறைந்த நார்ச்சத்து, குறைவான செரிக்கும் திறன் கொண்டதால் இவற்றின் மூலமாக கிடைக்கும் எரிசக்தி குறைவாக உள்ளது. மர இலைகளில் தாதுப்பொருட்களான சுண்ணாம்புசத்து அதிக அளவிலும், பாஸ்பரஸ் சத்து குறைந்த அளவிலும் உள்ளது.
இந்த நிலையில் கால்நடைகளுக்கு தீவன மரங்களின் இலைகளையும், பிற புல் வகைகளையும் கலந்து அளிக்க வேண்டும். இதனால் ஒன்றில் கிடைக்காத சத்து மற்றொன்றின் மூலம் ஈடுகட்டப்படும். மேலும் அளிக்கப்படும் இந்த வகை தீவனங்கள் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்குதலுக்கு உட்படாதவாறும் இருக்க வேண்டும்.