மஞ்சள் பயிரில் துத்தநாக சத்து குறைபாடு
துத்தநாக சத்துக் குறைபாடு மண்ணின் அமில கார நிலை 7-க்கு மேல் உள்ள நிலங்களிலும் அதாவது களர் நிலங்களிலும், களிமண் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள நிலங்களிலும் அதிகமாகக் காணப்படும்.
மேலும், இந்தச் சத்து குறைபாடானது தண்ணீர் பற்றாக்குறை அதிகமுள்ள காலங்களில் பரவலாகக் காணப்படும். இதனால், பயிர்கள் வளர்ச்சி குன்றி, குட்டையாகக் காணப்படும். இலைகள் அளவில் சிறியதாகவும், கணுவிடைப் பகுதியின் நீளம் குறுகியும் காணப்படும்.
மேலும், இளம் இலைகள் மஞ்சள் நிறமாக தோற்றமளிக்கும். இலைகள் மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ வளைந்து காணப்படும்.
நிவர்த்தி செய்யும் முறை:
இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசலை அதாவது 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில், 10 நாள்கள் இடைவெளியில், அறிகுறிகள் மறையும் வரை தொடர்ந்து இலைகள் மீது தெளிக்க வேண்டும்.
அடுத்த சாகுபடி செய்யும் பயிர்களில் துத்தநாக சத்து குறைபாடு வராமல் தடுக்க ஹெக்டேருக்கு 15 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை அடியுரமாக இட வேண்டும்.
மேலும், இதை ஊட்டமேற்றிய தொழுவுரமாக 1:1 என்ற விகிதத்தில் கலந்து மிதமான ஈரப்பதத்தில் 20-25 நாள்கள் வைத்திருந்து பயிருக்கு இடுவதன் மூலம் உரப் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.