மஞ்சள் வணிக ரீதியான பயிரில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் பயிரில் ஏற்படும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் மஞ்சள் மகசூல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது.
மஞ்சள் பயிரில் ஏற்பட்டுள்ள நுண்ணூட்டச் சத்து குறைபாடு நிவர்த்தி செய்ய
“ஓர் ஏக்கரில் சராசரியாக 2 முதல் 2.5 டன் உலர் மஞ்சள் கிழங்கு மகசூல் கிடைக்கும். சரியான உர மேலாண்மை, பயிர் வளர்ச்சிப் பருவத்தில் சரியான நீர்ப்பாசன முறைகளைப் பின்பற்றாததால் மஞ்சள் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
பொதுவாக மஞ்சள் பயிரானது மேலோட்டமான வேர் அமைப்பு கொண்டிருந்தாலும், நீண்ட காலப் பயிராக சாகுபடி செய்வதாலும், மிகக் குறைந்த இடத்தில் அதிக அளவு உலர் பொருளை உற்பத்தி செய்யக்கூடிய பயிராக இருப்பதாலும் மண்ணிலிருந்து அதிக சத்துக்களை எடுத்துக் கொள்கிறது.
மேலும், மற்ற பயிர்களைக் காட்டிலும் மஞ்சள் பயிருக்கு உரத் தேவை அதிகம். எந்தவொரு பயிரும் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்க பல்வேறு வளர்ச்சி நிலைகளில் மொத்தம் 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகின்றன.
பயிரின் வளர்ச்சிக்கு அதிகளவில் தேவைப்படும் பேரூட்டச் சத்துக்களான கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், தழை, மணி, சாம்பல், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகச் சத்து மற்றும் மிகக் குறைந்த அளவில் தேவைப்படுக் கூடிய நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம், போரான், குளோரின் ஆகியவை தேவை.
தற்போதைய காலகட்டத்தில் அனைத்து வகையான பயிர்களிலும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு அதிக அளவில் காணப்படுகின்றன. இதற்கு மிக முக்கியக் காரணங்கள் நவீன விவசாய முறையில் பின்பற்றக் கூடிய தீவிர சாகுபடி முறை, அதிக விளைச்சல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரகங்களைப் பயன்படுத்துதல், போதுமான அளவு இயற்கை உரம் அல்லது தொழுவுரம் இடாமை, தொடர்ந்து பேரூட்டங்களை மட்டுமே தரக்கூடிய ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல், பயிரின் வளர்ச்சி பருவம், காலநிலை மாற்றம் ஆகியவை ஆகும்.
இவற்றால் மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்காததால் பயிரில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் அதிகளவில் தோன்றுகின்றன.