அடைகாக்கும் முட்டைகள் அசுத்தமடைவதை தடுக்க என்னென்ன வழிகள் இருக்கு?

 |  First Published Nov 25, 2017, 12:29 PM IST
What are the ways to prevent the incubation of brooding eggs?



அடைகாக்கும் முட்டைகள் அசுத்தமடைவதை தடுக்கும் வழிகள் 

சுகாதாரமற்ற அடை வைக்கப்படும் முட்டைகள் குறைந்த குஞ்சு பொரிக்கும் வீதத்திற்கும், தரம் குறைந்த குஞ்சுகளுக்கும் காரணமாகும். நுண்கிருமிகளற்ற முட்டை ஓடு என்பது இல்லவே இல்லை. 

முட்டைகளைக் கோழிகள் ஆசன வாய் வழியாக இடும்போதே எச்சத்திலிருந்தும், சிறுநீரிலிருந்தும் முட்டை ஓட்டில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொண்டு விடும். முட்டை இடப்படும் போது அதன் ஓட்டிலிருக்கும் நுண்கிருமிகளின் எண்ணிக்கை 300-500 ஆக இருக்கும். 

முட்டை இட்டவுடன் எந்தப் பகுதிகளிலெல்லாம் முட்டை வைக்கப்படுகிறதோ அங்கிருந்த நுண் கிருமிகளால் அதன் ஓட்டுப்பகுதி அசுத்தமடையும்.முட்டை இடப்பட்டவுடன் அது குளிச்சியாக ஆரம்பிக்கும். 

இவ்வாறு குளிர்ச்சியாகும் போது முட்டையிலுள்ள உட்பொருட்கள் சுருங்க ஆரம்பித்து முட்டையின் உள்ளே எதிர்மறை அழுத்தம் ஏற்படும். இந்த நிலையில் தான் முட்டை ஓட்டிலுள்ள பாக்டீரியாக்கள் முட்டையின் உள்ளே செல்ல ஆரம்பிக்கும்.

முட்டையில் இயற்கையாகவே பாக்டிரியாக்களின் ஊடுருவலைத் தவிர்ப்பதற்கென சில செயல்முறைகள் இருக்கும். இது தவிர முட்டை ஓடும் பாக்டீரியாக்களின் தாக்குதலுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ளும் திறனுடையது. 

முட்டை ஓட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் க்யூட்டிகிள் பகுதி பாக்டீரியாக்களின் தாக்குதலுக்கு சிறப்பான எதிர்ப்பு சக்தியினைப் பெற்றுள்ளது. முட்டை ஓட்டின் உள்ளே இருக்கும் உட்புற மற்றும் வெளிப்புற சவ்வுகளும் பாக்டீரியாக்கள் உள்ளே வருவதைத் தடுப்பதற்கான தடுப்புச் சுவர்களாகச் செயல்படுகின்றன. 

முட்டையின் வெள்ளைக் கரு அல்லது அல்புமின் சிறிதளவு அசுத்தமடைவதைத் தடுக்கும் சக்தியுடையது. அல்புமினின் அமிலகாரத்தன்மை அதிகமாக இருப்பதால், அந்த அமிலக் காரத்தன்மையில் பாக்டீரியாக்கள் உயிரோடு இருக்க முடியாது. 

முட்டையின் உட்பகுதியிலுள்ள சலேசாவில் லைசோசைம் எனும் நொதி உள்ளது. இந்த நொதியிலும் பாக்டீரியாக்களுக்கான எதிர்ப்புத் திறன் இருக்கிறது.

கோழிகளை இனப்பெருக்கம் செய்து முட்டையினை வணிக ரீதியாக உற்பத்தி செய்பவர்கள் முட்டையின் மேற்புறத்தில் பாக்டீரியாக்களின் அளவினைக் குறைப்பதற்கு சில முறைகளைக் கையாளுகின்றனர். 

கருவுற்ற முட்டைகளை மணல் கொண்டு மூடி வைப்பது, துடைப்பது போன்றவை கருவுற்ற முட்டைகளை சுத்தப்படுத்தும் சரியான முறைகள் அல்ல. மணல் கொண்டு மூடி வைப்பதால் முட்டை ஓட்டின் வெளிப்பகுதியிலுள்ள க்யூட்டிகிள் பகுதியினை சேதப்படுத்தி விடும். 

பார்மால்டிஹைடு வாயு மூலம் புகை மூட்டுவது கருவுற்ற முட்டைகளை சுத்தப்படுத்தும் சிறந்த முறையாகும். குவார்ட்டனரி அமோனியம் பொருட்கள், ஃபார்மலின், ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனங்கள் கலந்த கரைசல்களும் முட்டைகளின் மீதுள்ள பாக்டீரியாக்களின் அளவினைக் குறைப்பதற்கு உதவி புரிகின்றன. 

தேவையில்லாமல் கருவுற்ற முட்டைகளைக் கழுவக்கூடாது. கருவுற்ற முட்டைகளைக் கழுவ வேண்டிய அவசியம் இருந்தால் முட்டையின் வெப்பநிலையினை விட அதிக வெப்பநிலையிலுள்ள தண்ணீரில் சுத்தமான துணியினை நனைத்து அதை வைத்து முட்டையினைத் துடைக்க வேண்டும். இதனால் முட்டையின் ஓட்டிலுள்ள ஓட்டைகளின் வழியாக அழுக்குகள் வேர்த்து வெளியே வந்து விடும். 

எப்போதும் முட்டைகளின் வெப்பநிலையினை விட குறைவான வெப்பநிலையினை உடைய தண்ணீரில் துணியினை நனைத்து முட்டைகளைத் துடைக்கக்கூடாது. மேலும் முட்டைகளை தண்ணீரில் நனைக்கக்கூடாது.

click me!