பூச்சி மருந்து பயன்படுத்தாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழி?
** முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பார்கள். அதேபோல், பூச்சிகளை பூச்சிகளால்தான் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது நன்மை செய்யும் பூச்சிகள் போதுமான அளவில் நம் வயல்களில் இருக்க வேண்டும்.
** அப்போது, பயிர்களை சாப்பிடும் தீமை செய்யும் பூச்சிகளை நன்மை செய்யும் பூச்சிகள் பிடித்து தின்று விடும். இதனால் பூச்சிகளின் பெருக்கம் இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்தப்படும்.
நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா?
** பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் ஏற்கெனவே வயல்களில் இருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க முடியும். மஞ்சள் நிறத்தில் பூ பூக்கக் கூடிய செண்டுப் பூ (துலுக்க சாமந்திப் பூ) செடி, மக்காச் சோளம் போன்றவற்றை வயல் வரப்புகளில் வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் பல பூச்சியினங்களை நம் வயல்களை நோக்கி வரும்படி கவரலாம்.
** வரப்புகளில் ஊடு பயிராக தட்டைப் பயறு சாகுபடி செய்யலாம். தட்டைப் பயறு செடியில் இருக்கும் அசுவினி பூச்சியைச் சாப்பிட ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் நம் வயல்களை நோக்கி படையெடுத்து வரும்.
** அசுவினியை தின்று முடித்த பின்னர் நம் வயல்களில் உள்ள பயிர்களில் மறைந்து கொண்டிருக்கும் தீமை செய்யும் பூச்சிகளையும் தேடிப் பிடித்து தின்னும். இதனால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் குறைக்க முடியும்.