பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்...
** வயல்களில் பயிரைத் தின்று மகசூல் இழப்பு ஏற்படுத்தும் பூச்சிகளால்தான் நமக்குப் பிரச்சினை. இவற்றை தீமை செய்யும் பூச்சிகள் என்கிறோம். அதே நேரத்தில் நம் சாகுபடி பயிரை சாப்பிடாமல், நமக்கு தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் பிடித்து சாப்பிடக் கூடிய சிலந்தி, குளவி, பொறிவண்டு, தட்டான் என வேறு ஏராளமான பூச்சிகள் உள்ளன. இவை யாவும் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகள்.
** நம் பயிரை சாப்பிடும் பூச்சிகள் இலையை சுருட்டிக் கொண்டோ அல்லது தண்டுகளை துளைத்துக் கொண்டோ உள்ளே பாதுகாப்பாக இருக்கின்றன. தட்டான், குளவி, சிலந்தி போன்ற நன்மை செய்யும் பூச்சிகள்தான் பயிர்களுக்கு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும்.
** இந்த சூழலில், நாம் பூச்சிக்கொல்லி மருந்துகளை வயல்களில் அடிக்கும்போது முதலில் நன்மை செய்யும் பூச்சிகள்தான் கொல்லப்படுகின்றன.
** இது தவிர நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகளை தாங்கி உயிர் வாழக் கூடிய தகவமைப்பு என்பது பூச்சிகளுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தின் வீரியத்தையும் அதிகப்படுத்திக் கொண்டே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
** எனவே, பூச்சிக் கொல்லி மருந்தின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அந்த வயல்களில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை சாப்பிடும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும்தான் பல புதிய புதிய நோய்கள் ஏற்படுகின்றன. மறுபுறம் பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பெருகிக் கொண்டே செல்கின்றன.