கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்கும் வகையில் கோடை உழவு செய்யலாம்.
புதுக்கோட்டை மாவட்டம், உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கோடையில் பரவலாக மழை பெய்யும். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் கிடைக்கும் மழை கோடைமழை எனப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்வது மிகவும் இன்றியமையாததாகும்.
வெப்ப மண்டலத்தில் உள்ள நம் புவியானது, கோடைக் காலத்தில் மேல்மண் அதிக வெப்பமடைகிறது.
இந்த வெப்பமானது கீழ்ப்பகுதிக்குச் செல்லும்போது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும். எனவே, மேல் மண்ணை உழுது ஒரு புழுதிப்படலம் அமைத்துவிட்டால் விண்வெளிக்கும் வேர் சூழ் மண்டலத்துக்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால் நிலத்திலுள்ள ஈரம் ஆவியாகாமல் இப்புழுதிப் படலம் தடுத்துவிடும்.
கோடை மழையைப் பயன்படுத்தி நிலத்தை நன்கு உழுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. கோடை உழவால் மேல் மண் துகள்களாகிறது. இதனால் மண் வெப்பத்தை உறிஞ்சி விரைவில் குளிர்ந்துவிடும்.
இதனால் நிலத்தில் நீர் இறங்கும் திறன் உயரும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது.
வயலிலுள்ள களைகள், குறிப்பாக கோரை போன்றவை கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தால் உலர வைத்து அழிக்கப்படுகின்றன.
கோரைக் கிழங்குகளைக் கைகளால் சேகரித்தும் அழிக்கலாம்.
நிலத்தின் அடியில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளின் கூண்டுப் புழுக்கள் கோடை உழவு செய்வதால் வெளியில் கொண்டு வரப்பட்டு வெயிலில் காயவைக்கபட்டு அழிக்கப்படுகின்றன.
பறவைகள் அவற்றை உண்டு, கூண்டுப் புழுக்களை அழிக்கின்றன.
அறுவடை செய்யப்பட்டுள்ள வயல்களிலுள்ள முந்தைய பயிரின் தாள்கள், வேர்கள், தட்டைகள் போன்றவை கோடை உழவின்போது மடக்கி விடப்படுவதால் மண்ணின் அங்ககச் சத்து அதிகரிக்கிறது.
இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடு மேம்படுகிறது. இதனால் மண்வளம் மேம்படுகிறது.
கோடை உழவைச் சரிவுக்குக் குறுக்கே செய்தல் வேண்டும். அதனால் மண்ணரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
கோடை உழவு செய்யாத நிலத்தில் மழை பெய்கிறபோது அம்மழை நீரானது வேகமாக வழிந்தோடி மண்ணரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.