வெண்டை சாகுபடி...
வெண்டைக்கு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த 75 சென்ட் நிலத்தைச் சட்டிக்கலப்பையால் உழுது, இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழவு செய்து 150 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் என்ற அளவில் பாத்தி எடுக்க வேண்டும்.
பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து நீளத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். 15 டன் தொழுவுரம், 400 கிலோ மண்புழு உரம், 400 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, தலா 1 கிலோ பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பாத்திகளின் மீது பரப்ப வேண்டும்.
பாத்திகளில் சொட்டுநீர்க் குழாய்களைப் பொருத்தி, பாத்திகளின் மீது ‘பாலிதீன் மல்ச்சிங் ஷீட்’ டை விரிக்க வேண்டும். மல்ச்சிங் ஷீட் விரிப்பதால் நிலத்தில் களைகள் வராது. நீர் ஆவியாவது தடுக்கப்படும்.
இவற்றை இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் சாகுபடி முடிந்தவுடன் சுருட்டி எடுத்து வைத்துவிடலாம்.
மல்ச்சிங் ஷீட்டின் இரு ஓரங்களிலும் ஓர் அடி இடைவெளியில் துளை ஏற்படுத்தி 4 அங்குல ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும். துளைகள் ‘ஜிக்ஜாக்’ காக முக்கோண நடவு முறையில் இருக்க வேண்டும்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து பாசனம் செய்து பாத்திகள் நன்கு ஈரமானவுடன், குழிக்கு ஒரு விதை வீதம் ஊன்றித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
விதைத்த 5-ம் நாளில் முளைப்பு எடுக்கும். 15-ம் நாளில் அரை அடி உயரம் வளர்ந்துவிடும். அந்த நேரத்தில் செடிகளைச் சுற்றி எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். இவை, இலைகள், தண்டுகளில் துளைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
எறும்புகள் வந்தால், 150 கிலோ வேப்பம் பிண்ணாக்கில் 6 லிட்டர் வேப்பெண்ணெய் கலந்து பிசைந்து, ஒவ்வொரு செடிக்கருகிலும் கைப்பிடி அளவு தூவினால் எறும்புகள் ஓடிவிடும். செடிகள் 35-ம் நாளில் பூத்து 40-ம் நாளுக்கு மேல் காய்க்கத் தொடங்கும். 45-ம் நாளில் இருந்து 140-ம் நாள் வரை காய்களைப் பறிக்கலாம்