இந்தப் பூச்சி பீடை தேனி மாவட்டத்தில் எள்ளை மானாவாரி பயிராகப் பயிரிடப்படும் பகுதிகளான கண்டமனூர், கடமலைக்குண்டு, பொன்னம்மாள்பட்டி, வருசநாடு, கூழையனூர், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, காமாட்சிபுரம், வயல்பட்டி, எரசக்கநாயக்கனூர், வேப்பம்பட்டி போன்ற இடங்களிலும் மற்றும் தமிழ்நாட்டின் எள் பயிரிடப்படும் எல்லாப் பகுதிகளிலும் இப்பூச்சி பெரும் சவாலாக உள்ளது.
இந்த அந்துப்பூச்சியின் புழுக்கள் எள் பயிரைத் தவிர சோயாமொச்சை, கத்தரி போன்ற பயிர்களையும் தாக்கக்கூடியவை. புழுக்கள் இலைகளையும், குருத்துப் பாகங்களையும் உண்டு அதிக அளவில் சேதம் விளைவிக்கும்.
பூச்சியின் வாழ்க்கைச் சரிதம்:
பெண் அந்துப்பூச்சி, மஞ்சள் நிற முட்டைகளை தனித்தனியாக இலைகளின் மேல் இடும். வளர்ந்த புழுக்கள் பெரியவைகளாகவும், நல்ல தடிமனாகவும், பச்சை நிறத்திலும், உடலில் மஞ்சள் நிற சாய்வான கோடுகளுடனும் தென்படும்.
உடலில் பின் பகுதியில் மேல் புறத்தில் மஞ்சள் நிற, நீண்ட, ஒற்றை மலப்புழைக் கொம்பு நீட்டிக் கொண்டிருக்கும். வளர்ந்த புழு மண்ணுக்கடியில் மண்கூடு கட்டி அதனுள் கூண்டுப்புழுவாக மாறும்.
அந்துப் பூச்சிகள் மிகப் பெரியவைகளாகவும், பழுப்பு நிறத்திலும், மார்பு பகுதியின் மேல் மண்டை ஓடு போன்ற அடையாளத்துடனும், வயிற்றுப் பகுதியில் ஊதா மற்றும் மஞ்சள் நிற குறுக்குப் பட்டைகளுடனும் தென்படும்.
இறக்கைகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
பூச்சிக் கட்டுப்பாடு:
கோடை உழவு மேற்கொள்வதால் கூண்டுப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
பூச்சி எதிர்ப்புத்தன்மையுடைய எள் இரகங்களைத் தேர்வு செய்து விதைக்குப் பயன்படுத்த வேண்டும்.
புழுக்கள் பெரியவைகளாகவும், எளிதில் கண்டுகொள்ளக் கூடியவைகளாகவும் காணப்படுவதால் அவற்றைப் பிடித்து அழிக்கலாம்.
டிரைக்கோ கிரம்மா ஆஸ்டிரேலிக்கம் போன்ற முட்டை ஒட்டுண்ணிகள் முட்டைகளைத் தாக்கி அழிக்கக் கூடியவை.
மைக்ரோபிளைட்டிஸ், டெட்ராஸ்டைக்கஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகள், புழுக்களைத் தாக்கி அழிக்கக் கூடியவை. தாக்கப்பட்டி குருத்துப் பாகங்கள் மற்றும் காய்களை சேகரித்து அழித்து விட வேண்டும்.
தோட்டங்களில் விளக்குப்பொறி வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
புழுக்களின் உடலில் ஊடுருவிப் பாயும் மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவு தெளிக்க வேண்டும்.