உணவின்றி கால்நடைகள் ஒரு மாதம் கூட உயிர் வாழ இயலும். ஆனால் நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ்வது கடினம்.
கறவை மாடுகளின் உடல் எடையில் 70% நீரும், பாலில் 87% நீரும் உள்ளது. உடம்பின் ஒவ்வொரு திசுக்களிலும் நீர் உள்ளது. நீரானது உடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டையுமே சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் நல்ல முறையில் செயலாற்ற உதவுகிறது. நீரானது, உணவு உட்கொள்ளுதல் செரித்தல் மற்றும் செரித்த உணவிலிருந்து தேவையான சத்துப்பொருட்களை இரத்தத்தில் சேர்த்தல் போன்ற வேலைகளுக்கு மிகவும் அவசியமாகிறது.
அதேபோல் உடம்பிலுள்ள தேவையற்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றவும் மிகவும் உதவுகிறது. மேலும், உடம்பின் வெப்ப நிலையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
தண்ணீர் குறைவினால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:
1.. குறைவான அளவு நீர் உட்கொள்வது தொடர்ந்து நிறுத்தப்படுவதால் இரத்தம் மிகவும் கெட்டியாகிவிடுகிறது. இதனால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது.
2.. நீர் குறைவாக உட்கொள்ளுவதால் சோர்வும், தளர்ச்சியும் ஏற்படுவதுடன் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது.
3.. நீர் உட்கொள்ளுதல் 20-22% ஆகக் குறையும் போது கால்நடைகள் இறக்கவும் நேரிடுகிறது. ஆனால் நீர் அதிகம் உட்கொள்ளுவதால் எந்தவித எதிரிர்விளைவுகளோ, பாதிப்போ ஏற்படுவதில்லை. நீர் எல்லா நேரங்களிலும் கிடைக்கும்படியாகச் செய்தல் அவசியம்.
4.. நீர் இழப்பு உட்கொள்ளும் நீரானது மூச்சுக்காற்றிலும், தோலின் மூலம் வியர்வையாகவும், மற்றும் சிறுநீர், சாணம் ஆகியவற்றுடன் வெளியேற்றப் படுகிறது. சிறுநீரில் உள்ள யூரியாவானது நீரினால் ‘பாதிப்பு இல்லாத அளவிற்கு கரைக்கப்பட்டு பின் வெளியேற்றப்படுகிறது.
5.. உட்கொள்ளும் நீரின் அளவு சீதோஷ்ண நிலை மற்றும் தீவனத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மாறுகிறது. கோடைக்காலத்தில் உட்கொள்ளும் நீரின் அளவு 20-30% அதிகமாக இருக்கும்.
6.. அதேபோல் நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்ளும்போதும் நீரின் தேவை பசுவைவிட கன்றுகளில் அதிகமாகவும், பால் கொடுக்கும் பசுக்களில் இவை இரண்டையும் விட அதிகமாகவும் இருக்கும்.
7.. தீவனத்தில் உள்ள உப்பின் அளவு மற்றும் அதிக புரதம் நிறைந்த உணவு ஆகியவை நீரின் தேவையை அதிகரிக்கின்றன.