தாவரங்களை பூச்சிகள் தாக்குவதால் மகசூல் குறையும். எனவே பூச்சிகளின் தாக்குதலில் இருந்து தாவரங்களை பாதுகாக்க இந்த இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
1.. வெங்காயம்:
சமையலில் முக்கிய இடம் வகிக்கும் வெங்காயத்தின் தாவரவியல் பெயர் ஆலியம் சிபா. இதன் இலை, தண்டுப்பகுதி ஆகியவற்றில் பல ரசாயன பொருட்கள் உள்ளன. இதனால் இது சிறந்த பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.
வெங்காயத்தை கொண்டு பூச்சிக்கொல்லி கரைசலை செய்யும் முறை:
85 கிராம் வெங்காயத்தை எடுத்து நன்றாக இடிக்கவேண்டும். பின்பு இதனுடன் 50 மில்லி மண் எண்ணையை கலந்து 24 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் 450 மில்லி தண்ணீர் மற்றும் 10 மில்லி காதி சோப் கரைசலை சேர்த்து நன்றாக கலக்கிய பின்னர் வடிகட்டவேண்டும். வடிகட்டிய கரைசலை ஒரு பாட்டிலில் சேகரிக்கவும்.
தெளிப்பதற்கு முன்பு 1 பங்கு கரைசலுடன் 19 பங்கு தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். அதாவது 50 மில்லி கரைசலுடன் தண்ணீரை சேர்க்கவும். இந்த கரைசலை தெளிப்பதற்கு உகந்த நேரம் காலை நேரமாகும்.
2.. பூண்டு:
இதன் தாவரவியல் பெயர் ஆலியம் சைட்டலாம் இது தரையடி குமிழ் தண்டு வகையைச் சேர்ந்தது. பூண்டு பல வேதிப்பொருட்களை கொண்டுள்ளதால் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. பூண்டில் அலிசின் என்ற ரசாயனப்பொருள் உள்ளது.
பூண்டில் இருந்து தயாரிக்கப்படும் கரைசலைப்பற்றி காண்போம்.
85 கிராம் பூண்டை எடுத்து நன்றாக இடித்து அதனுடன் 50 மில்லி மண் எண்ணை கலந்து 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் அதனுடன் 450 மிலி தண்ணீர், 10 மில்லி காதி சோப் கரைசலை சேர்த்து நன்றாக கலக்கிய பின்பு வடிகட்டவும்.
வடிகட்டிய கரைசலை ஒரு பாட்டிலில் சேகரிக்கவும். இதை தெளிக்க ஒரு பங்கு கரைசலுடன் 19 பங்கு தண்ணீர் கலந்து தெளிக்கவும். அதாவது 50 மில்லி கரைசலுடன் 950 மில்லி தண்ணீர் சேர்க்கவும்.
இக்கரைசலை தெளிக்க தகுந்த காலம் காலை நேரமாகும். தெளிக்குமுன்பு நன்றாக கலக்கி தெளிக்கவும். 50 மில்லி மண்ணெண்ணையை எடுத்துக்கொள்ளவும்.
லிட்டருக்கு 1 மில்லி எண்ணையுடன் காதிசோப் கரைசலை சேர்க்கவும். இதனால் எளிதாக இலைகள் ஒட்டிக்கொள்ளும். 50 மில்லி எண்ணைக்கரைசலையும் 950 மில்லி தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்கு உடனடியாக பயன்படுத்தவும். இந்த கரைசலை கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும்.
3.. பூண்டு – வேம்பு கரைசல்:
100 கிராம் ஓடு உடைத்த வேம்பு விதை, ஒரு கிலோ பூண்டு, 10 கிலோ வேப்ப இலை, 1/2 கிலோ வேம்பு தண்டு, வேம்பு வேர்பட்டை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். இவை அனைத்தையும் கரைத்து வடிகட்டி அதனுடன் 12 லிட்டர் தண்ணீரை சேர்க்கவும்.
இக்கரைசலை தாமிரத்தால் ஆன பாத்திரத்தில் லேசான சூட்டில் கொதிக்கவைக்கவேண்டும். வேம்பு விதை கிடைக்கவில்லை எனில் 50 மில்லி வேப்ப எண்ணையை சேர்க்கலாம். கொதிக்கவைத்த பின்னர் குளிர்விக்கவேண்டும்.
இக்கரைசலை வடிகட்டி அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தெளிக்கலாம். வடிகட்டிய கரைசலை 4 முதல் 5 வாரம் வரை சேமித்து வைக்கலாம். இக்கரைசலை 3 நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
4.. பச்சை மிளகாய் – பூண்டு:
சம அளவு பச்சை மிளகாயும், பூண்டையும் எடுத்து நன்றாக அரைத்து சாறெடுக்கவும். 1 மில்லி கரைசலுடன் 200 மில்லி தண்ணீர் கலந்து தெளிக்கவும்.
பூண்டு, மிளகாய், இஞ்சி, வேப்ப எண்ணை, பெருங்காயம் ஆகியவற்றின் சாறுடன், பசுவின் கோமியம் கலந்து 72 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் வடிகட்டி தெளிக்கலாம்.
இரண்டு பெரிய பூண்டுடன் இரண்டு தேக்கரண்டி மிளகு சேர்த்து நசுக்கி, 4 லிட்டர் வெந்நீரில் கலந்துவிடவும். இக்கரைசலுடன் காதி சோப் கரைசலை சேர்த்து தெளிக்கவும்.
இப்படி தயாரிக்கப்பட்ட கரைசலை அசுவினி, பாக்டீரியா, ஈ, கரையான், கொசு, பூஞ்சை நோய், வெள்ளை ஈ, தண்டு துளைப்பான் ஆகிய தாவரங்களைத் தாக்கும் பூச்சிகள் மீது தெளித்து அவற்றை வெகுவாக கட்டுப்படுத்தி மகசூலை குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.