செம்மறியாடுகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வரும் நிலையில் ஆடுகளுக்கு அவற்றின் அடர்தீவன தேவையை ஈடுகட்ட தேவையான அளவு தீவனத்தை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.
பொதுவாக, செம்மறியாடுகளில், சினையாடுகள், குட்டி ஈன்றவை முதலியன தமக்கு தேவையான உணவிற்கு அடர்தீவனம் கிடைத்தால் மட்டுமே அதிக பால் உற்பத்தியை தருவதுடன், சரியான நேரத்தில் கருத்தரிக்கவும் செய்கிறது.
செம்மறி ஆடுகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனத்தில் 28 பங்கு மக்காச்சோளமும், 9 பங்கு வெள்ளை சோளமும், கடலைப் புண்ணாக்கு 25 பங்கு, எள்ளுப்புண்ணாக்கு 5 பங்கும் கோதுமை தவிடு 15 பங்கும், அரிசித்தவிடு 10 பங்கும், துவரந்தூசி 5 பங்கும், தாது உப்பு 2 பங்கும், உப்பு1 பங்கும் உள்ளன.
இளம் குட்டிகள் பிறந்த 3 மாதங்கள் வரை தாயிடமிருந்து பால் அருந்த வேண்டும். இவற்றுக்கு 2 முதல் 3 வார வயது தொடங்கும் போது அடர்தீவனம் அளிக்கும்போது இளம் குட்டிகளின் உடல் எடை அதிகரிக்கும்.
நாள் ஒன்றிற்கு குட்டிகளுக்கு 50 கிராம் என்ற அளவில் தொடங்கி முதல் எட்டு வாரங்களுக்கு அடர்தீவனத்தை அளித்தல் வேண்டும். மேலும் எட்டு வாரத்திற்கு மேல் நாள் ஒன்றிற்கு 100 கிராம் என்ற அளவிலும் அளித்தல் வேண்டும்.
அடர்தீவனம் அளிப்பதால் குட்டிகளின் 3 மாத வயதில் அவற்றின் உடல் எடையானது 12 கிலோ வரை அதிகரிக்கும். அதாவது அவற்றின் எடை நாள் ஒன்றிற்கு 150 கிராம் முதல் 200 கிராம் வரை ஆடுகளின் உடல் எடைக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.
கிடா மற்றும் பெட்டை ஆடுகளின் 12 சதவிகிதம் புரதம் இருத்தல் வேண்டும். கிடா ஒன்றிற்கு 300 முதல் 350 கிராம் அடர்தீவனம் அளித்தல் முக்கியமானது. பொலிவிற்கு பயன்படுத்தும் கிடாக்களுக்கு 50 கிராம் முதல் 100 கிராம் வரை கூடுதலாக அளிப்பது நல்லது.
குட்டி ஈன்று பால் கொடுக்கும் காலத்தில் நாள் ஒன்றிற்கு 250 கிராம் என்ற அளவில் கொடுக்க வேண்டும். இனவிருத்தி காலத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன் பெட்டை ஆடுகளுக்கு நாள் ஒன்றிற்கு 200 கிராம் அடர்தீவனம் அளித்து வந்தால் அவற்றின் வளர்ச்சி கூடும்.