பல இடங்களில் குறுவைநடவு முழுவீச்சில் நடைபெறும் நேரமிது. இத்தருணத்தில் பல பகுதிகளில் டி.ஏ.பி. உரம் கிடைக்கவில்லை என்று குறைகள் தெரிவிப்பதுண்டு.
undefined
நம் மண்ணில் போதிய அளவு மணிச்சத்து நிறைந்துள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால் அவை பல இடங்களில் கிட்டா நிலையில் உள்ளது. இதனை போக்கிட பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் ஏக்கருக்கு 10 பாக்கெட் என்ற அளவில் இட்டால் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிருக்கு கிடைக்கச் செய்யும்.
எனவே அடியுரமாக டி.ஏ.பி. இடவேண்டும் என்பது தேவையில்லை. அதனால் செலவை குறைக்கலாம். அடுத்து அடியுரமாக யூரியாவும் இடவேண்டிய அவசியமில்லை.
நட்ட பயிர் பச்சை பிடித்து சத்தினை எடுத்துக்கொள்ள 10, 15 நாட்களாகலாம். அதன்பின் தேவையறிந்து சிறிது சிறிதாக தழைச்சத்து உரத்தை பிரித்து இடுவதே சிறந்தது.
அல்லாமல் அடியுரமாக இடுவதால் அவை நீரில் கலந்து ஆவியாகலாம், அல்லது மண்ணில் அடிப்பாகத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே நட்ட 15 நாள் கழித்து மேலுரமாக தழைச்சத்து உரமிடுவதே சிறந்தது.
நடவு வயலை சீராக சமன் செய்து நடவினை மேற்கொள்ளுதல், நடும்போது அதிக நீர்க்கட்டாமல் சீராக நீர் வைத்து நடுவதால் மேலாக நடவு செய்ய ஏதுவாகும். அதனால் அதிக தூர்கள் விரைவில் வெடிக்கும்.
செம்மை நெல் சாகுபடி செய்ய இயலாதவர்கள் கூடியவரை வரிசை நடவு செய்வது சிறந்தது. முறைப்பாசனத்தில் வயல்கள் காய்ந்து விடுகின்றது. அந்த கவலை வேண்டாம். எந்தெந்த வயல்களில் இயற்கை உரம் அதிகம் இடப்பட்டுள்ளதோ அந்த வயல்கள் வறட்சியை தாங்கும். இல்லாவிட்டாலும் கூட ஒரு வார இடைவெளியில் எந்த தீங்கும் ஏற்படாது. காய்ச்சலும், பாய்ச்சலுமாக நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது.