மண் வளத்தை மேம்படுத்தும் இயற்கை உரத் தொழில்நுட்பம்:
** மண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்த தகுந்த உரத்தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
** விவசாய நிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்வதால், மண் வளம் குன்றிவிடும். எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. மண் வளத்தை அதிகபடுத்த சத்துக்களைச் சரியான அளவில் அளிக்க வேண்டும்.
** ரசாயண உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் மண்ணிலுள்ள நுண்ணியிரிகளையும் மண்புழுக்களையும் அழிக்கின்றன.
** நுண்ணுயிரிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள வளமற்ற மண்ணில், ரசாயன உரங்கள் இடும்போது அவற்றின் முழுப்பயனும் பயிர்களை சென்றடைவதில்லை. இதனால் தான், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எவ்வளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தினாலும் விளைச்சல் அதிகரிக்காததுடன், இடுபொருட்களுக்கான செலவும் குறைவதில்லை.
** மேலும் உயிரற்ற மண்ணில் வேளாண்மை செய்வதால் லாபம் இருக்க முடியாது. மண்ணுக்கும் உயிருண்டு என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.
மண் வளத்தை அளிக்கும் காரணிகள்:
** மண்ணில் நுண்ணுயிரிகள் கோடிக்கணக்கில் உள்ளன. மேலும் மண் புழுக்கள், கரையான், மண் வாழ் பூச்சியினங்களும் உள்ளன. இவையே மண்ணின் இயற்கை சூழலைப்பாதுகாக்கின்றன.
** இந்த நுண்ணியிரிகள் மிகவும் சுறுசுறுப்பானவை. நாம் மண்ணில் இடும் தொழு உரம், பசுந்தாள் உரம் பண்ணைக்கழிவுகள் மீது செயல்பட்டு, அவற்றை உணவாக பயன்படுத்தி, மக்கச் செய்து மண் வளத்தை பெருக்குகின்றன.
** எனவே, மண்ணில் இயற்கையாக மக்கும் பொருள்கள் இல்லையென்றால் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் குறையும். மண்ணில் ஒரு பாக்டீரியா செல்லானது 15 முதல் 20 நிமிஷங்கள் இரண்டாக உடையும். ஒரு நாளில் அவை பல மில்லியன்களாக மாறுகின்றன.
** ஆனால், இயற்கை வளங்கள் ஏதுமற்ற நிலையில் பாக்டீரியாக்கள் இறந்து விடும். அல்லது உறக்க நிலைக்கு சென்று விடும். இவை அங்ககப்பொருட்களை மக்கச் செய்து, மண்ணிற்கு அளிப்பதோடு மட்டுமல்லாமல், காற்றிலுள்ள தழைச்சத்தை உள்வாங்கி, மண்ணில் நிலைநிறுத்தி, பயிர்களுக்கு அளிக்கின்றன.
** எனவே மண் வளத்தை பாதுகாக்க அதிக அளவில் இயற்கை உரங்கள் அதாவது கரிமக் கார்பனை மண்ணில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும். மண் இயற்கையாக அதிக கரிம ஊட்டத்தோடு இருந்தால், மண்ணில் இடும் எந்த உரத்தையும் இழப்பில்லாமல் சரியான வகையில் பயிர் பயன்படுத்திக் கொள்ளும். அந்த வகையில் வயலிலேயே தயாரிக்கக்கூடிய சில இயற்கை வழி உரங்களை காண்போம்.