தென்னை மரங்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டுள்ள, வட்ட வடிவ பாத்தியிலும், ஊடுபயிர் சாகுபடி செய்து, அசத்துகின்றனர் உடுமலை பகுதி விவசாயிகள்.
உடுமலை அருகே கல்லாபுரத்தில் ஆற்று பாசனத்தை பயன்படுத்தி நெல், கரும்பு போன்றவையே முக்கிய சாகுபடியாக செய்யப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் மாற்று பயிர்களை விவசாயிகள் சிந்திக்காத நிலையில் சிலர் மட்டுமே சோதனை முயற்சியாக ஜாதிக்காய், கோகோ, மாதுளை போன்ற பயிர்களை தனியாகவும், தென்னையில் ஊடுபயிராகவும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கல்லாபுரத்தில் மாற்று முயற்சியாக தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களில் அறுவடை செய்ய தயாராகி வருகிறது.
தென்னை மரங்களுக்கு இடையில் இல்லாமல் மரங்களை சுற்றிலும் தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்ட வட்டப்பாத்தியில் நடவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சாகுபடி செய்வதால் மஞ்சள் பயிர்களுக்கென்று தனியாக தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை.தென்னை மரங்களுக்கு விடப்படும் தண்ணீரே, மஞ்சள் செடிகளுக்கும் போதுமானதாக உள்ளது.
ஒரு ஆண்டு பயிரான மஞ்சள், கிழங்காக நடவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு செடிகளுக்கும் இடையில், 15 முதல், 30 செ.மீ., இருக்கும் வகையில் மரங்களை சுற்றிலும் பயிரிடப்பட்டுள்ளது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
உடுமலையில் கோ.1, கோ.2, பி.எஸ்.ஆர்.1 மற்றும் பி.எஸ்.ஆர்.2 ஆகிய ரகங்களே பயிரிடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஜனவரி முதல் மார்ச் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
ஒரு செடியில் இருந்து, குறைந்தது இரண்டு கிலோ வரைக்கும் மஞ்சள் கிடைப்பதாகவும், ஏக்கருக்கு 15 முதல், 20 டன் வரைக்கும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ரகங்களை காட்டிலும், கேரளத்தை சேர்ந்த ஒட்டு ரக மஞ்சளில் ஏக்கருக்கு, 20 டன்னுக்கும் மேலாக விளைச்சல் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவ்வப்போது ஏற்படும் இலைநோய் தாக்குதலுக்கு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்து நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால் செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதுடன், நோய்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் செடிகளாக விற்பனை செய்யப்படுகிறது. மற்றவைகள் நன்கு காய்ந்து பின்பே அறுவடை செய்யப்படுகிறது.
ஈரப்பதத்தை குறைப்பதற்காக அறுவடைக்கு முன்பு அதன் இலைகள் தனியாக அறுக்கப்பட்டு; 15 நாட்கள் கழித்து அதன் கிழங்குகள் தோண்டி எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அறுவடை செய்யப்படும் மஞ்சள் கிழங்குகளை வேகவைத்து, நன்கு உலர்த்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.