உலகில் மா ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
மா வெப்ப மண்டலத்தில் விளையும் பயிர். மற்ற மண் வகைகளை விட செம்மண் பூமி மா சாகுபடிக்கு ஏற்றது.
செம்மண் பகுதிகளில் விளையும் மாம்பழங்களின் சுவை நன்றாக இருக்கும். மா வில் பல ரகங்கள் இருந்தாலும். பங்கனபள்ளி, இமாம்பசந்த், அல்போன்சா ஆகியவை மிக பிரபலமானவை. ஏற்றுமதியில் அதிக பங்களிப்பு உள்ளவை.
மா பெரும்பாலும் ஒட்டு கட்டிய செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பல முறைகளில் ஒட்டு கட்டினாலும் சமீபத்திய மற்றும் பிரபலமான முறை ஆப்பு ஒட்டு முறை. இதை நாமே எளிதாக கட்டிக் கொள்ளலாம்.
ஒரே செடியில் சுமார் இருபத்தைந்து வகைகளை ஒட்டு கட்டலாம். இம் முறையில் சீசன் ஆரம்ப முதல் கடைசி வரை தொடர்ந்து பல வகையான மாங்கனிகள் கிடைக்கும்.
நடவு முறையில் தற்பொழுது இரு விதங்கள் நடைமுறையில் உள்ளன. அடர்நடவு மற்றும் சாதாரண நடவு முறை. அடர்நடவு முறையில் ஏக்கருக்கு 650 செடிகள் வரை நடப்படுகிறது. சாதாரண நடவு முறையில் 40 செடிகள் போதுமானதாகும்.
மா நடவு செய்ய ஆடி பட்டம் சிறந்தது. இரண்டரை முதல் மூன்று அடி ஆழம் குழிகள் இருக்க வேண்டும். அகலம் ஒன்றரை அடி. அதில் பத்து கிலோ மண்புழு உரம் இட்டு இதனுடன் உயிர் உரங்களை கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கிலோ வேப்பம்புண்ணாக்கு, சிறிது சுண்ணாம்பு தூள் இட்டு நட வேண்டும். இதனால் வேர் சம்மந்தப்பட்ட நோய்கள் தடுக்க படுகிறது.
செடி நடவு செய்யும்பொழுது கடைபிடிக்க வேண்டியவைகள். செடி காற்றில் அசையாமல் குச்சியை நட்டு கயிற்றால் கட்டவேண்டும். ஒட்டு பகுதி மேலே தெரியும் படி இருக்க வேண்டும். செடி நன்கு துளிர் விட்ட பிறகு மண் கொண்டு ஒட்டு பகுதியை மூடி விடலாம். தேவைக்கு ஏற்ற படி தண்ணீர் விடலாம்.
ஒருசில சத்து குறைபாடு உள்ள மண்ணில் மா நடவு செய்யும்பொழுது கண்டிப்பாக நுன்னூட்ட சத்துக்கள் இடவேண்டும். இல்லை என்றால் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கும். ஆட்டு எரு இடுவது சிறந்தது.
தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் வேரில் அளிப்பதன் மூலம் தூரிதமான வளர்ச்சி இருக்கும். மீன் அமிலம் கலந்து ஊற்ற வேண்டும். உயிர் உங்களுடன் VAM கலந்து இட்டால் வேர் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
மா வகைகளில் முதலில் காய்ப்பவை செந்தூரா. கடைசியாக சந்தைக்கு வருபவை நீலம். இதன் இடைப்பட்ட பருவத்தில் வருபவை பங்கனபள்ளி, இமாம்பசந்த், அல்போன்சா, பெங்களூரா, ருமானி ரகங்கள். மாவில் பூக்கள் உதிராமல் பார்த்துக்கொள்வதால் மகசூல் அதிகரிக்கும்.
டிசம்பர் மாதத்தில் மரங்களின் கீழ் ஈர வைக்கோல் கொண்டு புகை உருவாக்குவதால் அதிக பூக்கள் வர வாய்ப்பு. சில ரகங்கள் பருவம் இல்லாத காலங்களிலும் காய்க்கும். இவை காய்களாகவே சந்தையில் விற்பனை செய்யப் படுகின்றன.
திடமான சந்தை வாய்ப்பு உடைய ரகங்கள் பங்கனபள்ளி. இமாம்பசந்த், அல்போன்சா மற்றும் பெங்களூரா. இதில் பெங்களூரா பழக் கூழ் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்த படுகிறது. சில ஜூஸ் ரகங்கள் உள்ளன. அவற்றில் பிரபலமானது ரசால் என்ற வகை.
மூன்று வருடங்களுக்கு பின்னர் காய்க்க அனுமதிப்பது சிறந்தது. அப்போது தான் மரங்கள் வளர்ச்சி நன்கு இருக்கும். வருடம் இருமுறை கண்டிப்பாக உரமிடவேண்டும். மா மரங்களில் இருந்து உதிரும் இலைகள் மண்புழு உரம் தயார் செய்யவும் பயன்படும்.
மா மரங்களை அதிகம் தாக்கும் நோய்கள். சாறு உறிஞ்சும் பூச்சி, சாம்பல் நோய் மற்றும் தளிர் இலைகளை சேதப்படுத்தும் பூச்சிகள். தொடர்ந்து கற்பூரகரைசல் தெளித்தால் இந்த நோய்களை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். கற்பூரகரைசல் தெளிப்பதால் அதிகமான பூக்கள் தோன்றும்.
நவம்பர் மாதம் முதல் ரகங்களுக்கு ஏற்ப பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். ஒரு சதவீதம் பூக்கள் மட்டுமே பிஞ்சுகள் ஆகும். பூக்கள் பூக்கும் சமயத்தில் தண்ணீர் பாய்ச்ச கூடாது. பாய்ச்சினால் பூக்கள் உதிர வாய்ப்புகள் அதிகம். தேங்காய் பால் புண்ணாக்கு கரைசல் தெளிக்கும் போது பூ உதிராது அதிக பிஞ்சுகள் உருவாக வாய்ப்பு. பனிப்பொழிவு அதிகமானாலும் பூக்கள் உதிரும்.
ஐந்து வருடங்கள் வரை கவாத்து செய்ய தேவை இல்லை. அதன் பிறகு தரையில் படும் கிளைகளை மட்டுமே கவாத்து செய்யலாம். அறுவடை முடிந்ததும் காய்ந்த கிளைகள் மற்றும் சில அடர்த்தியான கிளை களை நீக்கலாம். சூரிய ஒளி கிளைகளில் நன்கு படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
காய்களின் சதைபகுதி மஞ்சள் நிறத்தில் மாறும் போது அறுவடைக்கு தயார் என்று அர்த்தம். இயற்கை முறையில் பலன்களை பழுக்க வைப்பது சிறந்தது. சுவையும் மாறாமல் இருக்கும்.
மா மரங்கள் நூறு ஆண்டுகள் வரை வாழும். வயது அதிகம் ஆக ஆக பழங்களின் அளவு குறையும். வயது முதிர்ந்த மரங்கள் மர வேலைப்பாடுகளுக்கு பயன்படுத்த படுகின்றன.
மாங்கன்றுகள் நடவு செய்யும் போதே வயலை சுற்றிலும் தேக்கு, செம்மரம், மஹோகனி, சந்தனம், குமிழ்தேக்கு போன்ற மரப்பயிர்களை நடவு செய்வது இருபது வருடங்களுக்குபின்னர் ஒரு கனிசமான வருமானத்திற்கு வழி வகுக்கும்.