தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக இழப்பைச் சந்தித்த சம்பா சாகுபடி விவசாயிகள் இப்போது கோடை நெல், உளுந்து பயிர்களுக்குப் பதிலாக எள் சாகுபடியை நம்பிக்கையுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறுவை சாகுபடியைக் கைவிட்ட விவசாயிகள் பருவ மழையை எதிர்நோக்கி சம்பா சாகுபடி மேற்கொண்டனர். ஆனால், வறட்சி காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டதால், பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.
சம்பா அறுவடையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் உளுந்து சாகுபடியும் நிகழாண்டில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மாவட்டத்தில் சுமார் 24,000 ஏக்கரில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இது, இயல்பான பரப்பளவில் 40 சதவீதம் மட்டுமே.
சம்பா சாகுபடி தாமதமாகத் தொடங்கி பிப்ரவரி இறுதியில்தான் அறுவடை செய்யப்பட்டது. இதனால், நிகழாண்டு பெரும்பாலான விவசாயிகள் உளுந்து சாகுபடி மேற்கொள்ள முடியாமல் போனது. மேலும், மின் பற்றாக்குறை காரணமாக கோடை நெல் சாகுபடியையும் பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டனர்.
எனவே உளுந்து, கோடை நெல் சாகுபடி வாய்ப்பை இழந்த விவசாயிகள் எள் சாகுபடியை நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளனர். வழக்கமாக சித்திரைப் பட்டத்தில்தான் எள் சாகுபடி தொடங்கப்படும்.
ஆனால், உளுந்து பயிரிடுவதற்கு வாய்ப்பில்லாததால் எள் சாகுபடியை மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிட்டனர். மாவட்டத்தில் இதுவரை 4,100 ஹெக்டேரில் எள் பயிரிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், அய்யம்பேட்டை, பாபநாசம், பட்டுக்கோட்டை (ஒரு பகுதி) ஆகிய ஒன்றியங்களில் அதிக அளவில் எள் சாகுபடி பரவலாக செய்யப்படுகிறது. இப்போது, இந்தப் பயிர் பூ பூக்கும் தருணத்தை எட்டியுள்ளது.
எனவே, நிகழாண்டு சித்திரை பட்டத்தில் எள் சாகுபடி பரப்பளவு ஏறத்தாழ 5,000 ஹெக்டேரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எள் பயிர் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது மட்டுமல்லாமல், அதற்கான சாகுபடிச் செலவும் குறைவுதான். மொத்தம் 90 நாள் பயிரான எள் சாகுபடியில் பூச்சி தாக்குதலும் இருக்காது.
பாசனப் பகுதியில் ஏக்கருக்கு 500 கிலோவும், மானாவாரி பகுதியில் ஏக்கருக்கு 200 கிலோவும் மகசூல் கிடைக்கும். எனவே, நிகழாண்டு கோடை நெல், உளுந்து சாகுபடி வாய்ப்பை இழந்த விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்பதால் எள் சாகுபடிக்கு மாறலாம். தவிர, மோட்டார் பம்ப்செட் வசதியுள்ள நிலங்களில் ஏறத்தாழ 4,800 ஹெக்டேரில் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றாலும், இது இயல்பான பரப்பளவைவிட மிகவும் குறைவு.