இயற்கை இடர்பாடுகளான வறட்சி, புயல், அதிக வெப்பம், அதிகமழை, அதிவேக காற்று ஆகியவற்றால் வாழை, காய்கறிகள், மிளகாய், மலர்கள், மரவள்ளி, வெங்காயம் போன்ற தோட்டக்கலை பயிர்களில் பயிர் இழப்பும், மகசூல் இழப்பும் ஏற்பட வாய்ப்புண்டு.
அத்தகைய தருணங்களில் உதவிக்கு வருவதுதான் பயிர்க் காப்பீட்டுத் திட்டம். மத்திய அரசு நிறுவனமான வேளாண் காப்பீட்டு நிறுவனம், பயிர் காப்பீட்டுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்தகைய பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களில் விவசாயிகள் அதிகளவில் பங்கு கொண்டு பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தமிழக அரசு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத்தில் பாதித் தொகையை மானியமாக வழங்கி வருகிறது. மீதித் தொகையை மட்டும் விவசாயிகள் பிரிமியமாக செலுத்தினால் போதும்.
அ. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்:
இத்திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழை, மரவள்ளி, வெங்காயம் ஆகிய பயிர்களில் குறிக்கப்பட்ட பிர்காக்களில் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில் இழப்பீடு, மகசூல் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பிட்ட பயிர்களில் பெறப்பட்ட சராசரி மகசூலை அளவுகோலாக கொண்டு, மகசூல் இழப்பு கணக்கிடப்படுகிறது.
தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வணிக வங்கிகளிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் கட்டாய அடிப்படையிலும், இதர விவசாயிகள் விருப்பத்தின் அடிப்படையிலும், இத்திட்டத்தின்கீழ் பங்கு பெறுகின்றனர்.
காப்பீடு செய்யப்படும் பயிர்களை சாகுபடி செய்யும் குத்தகைதாரர் உள்பட அனைத்து விவசாயிகளும் இத் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.
செலுத்த வேண்டிய பிரிமியம்:
வாழை பயிருக்கு பயிர் காப்பீடு செய்யும் தொகையில் 7.8 சதவிகிதமும், வெங்காயத்தில் 7.5 சதவிகிதமும், மரவள்ளியில் 6 சதவிகிதமும் பிரிமியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பயிர்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு பிரிமியத்தில் 50 சதவிகித மானியமும், கடன் உதவி பெறாத விவசாயிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பிரிமியத்தில் 55 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு பிரிமியத்தில் 50 சதவிகித மானியமும் தமிழக அரசு வழங்கி வருகிறது. விவசாயிகள் மானியம்போக எஞ்சிய தொகையைச் செலுத்தினால் போதும்.
உதாரணத்துக்கு ஒரு ஏக்கர் வாழை பயிரை ஒரு விவசாயி ஒரு லட்சம் ரூபாய்க்கு பயிர் காப்பீடு செய்ய விரும்பினால் அதற்கான பிரிமியம் ரூ.7800, அதில் சிறு குறு விவசாயிகள் ரூ.3510-ம், இதர விவசாயிகள் ரூ.3900-ம் பிரிமியமாக செலுத்தினால் போதும், எஞ்சிய தொகையை தமிழக அரசு செலுத்தி விடுகிறது. இதைவிட குறைந்த தொகைகளுக்கும் பயிர் காப்பீடு செய்யலாம்.
இதையே ஒரு விவசாயி ரூ.10 ஆயிரத்துக்கு காப்பீடு செய்ய விரும்பினால் அதற்கான பிரிமியம் ரூ.780, சிறு, குறு விவசாயிகள் ரூ.351, இதர விவசாயிகள் ரூ.390-ம் பிரிமியமாக செலுத்தினால் போதும். அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வாழைக்கு ரூ.4,99,224 வரைதான் பயிர் காப்பீட்டு செய்ய முடியும்
இந்த பிரிமியத்தை உரிய படிவத்தில் விவரங்களை நிரப்பி, தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வணிக வங்கிகளிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் செலுத்தலாம். கடன்பெறாத விவசாயிகள் வாழை, மரவள்ளி, வெங்காயத்துக்கு பிரிமியம் செலுத்த கடைசி நாள் செப்டம்பர் 15.
ஆ. வானிலை பயிர் காப்பீட்டுத் திட்டம்:
இத் திட்டம் தக்காளி, வெங்காயம் ஆகிய காய்கறிப் பயிர்களுக்கும், மிளகாய், மலர்கள் ஆகிய பயிர்களுக்கும் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில் வட்டாரந்தோறும் இயங்கும் தானியங்கி வானிலை நிலங்கள் தரும் மழையளவு, வெப்பநிலை, காற்றின் வேகம் ஆகிய வானிலை தகவல்களின் அடிப்படையில் இயற்கை இன்னல்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு மிளகாய், மலர்கள், தக்காளி, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு ரூ.15 ஆயிரம் காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரிமியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.1725 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு தரும் மானியம் ரூ.825 போக, ரூ.900-ம் மட்டும் விவசாயிகள் பிரிமியமாக செலுத்தினால் போதும். இத் திட்டத்தில் பிரிமியம் செலுத்த கடைசி நாள் ஆகஸ்ட் 31.
இது குறித்த விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.