கோழிகளுக்கு ஏற்ற திறந்த வெளி வீடமைப்பு கொட்டகை முறை
இந்த வகை வீடமைப்பினைப் போதுமான அளவு இடவசதி இருந்தால் மட்டுமே அமைக்கமுடியும். மேலும் போதுமான எண்ணிக்கையிலான கோழிகளை அதிக அடர்த்தியின்றியும் வளர்ப்பதற்கு அதிக இடம் தேவைப்படும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 250 கோழிகளை வளர்க்கலாம்.
மேலும், இந்நிலத்தில் நிழல், பசுந்தீவனம், அடர் தீவனம் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இந்நிலத்திலுள்ள பசுந்தீவனம் கோழிகளுக்கு ஏற்ற தீவன ஆதாரமாக அமைகிறது. கோழிகளை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க ஒரு கொட்டகையினை தற்காலிகமான கூரைகளைக் கொண்டும், சாதாரண மரக்கம்புகளைக் கொண்டும் அமைக்கவேண்டும்.
நிலத்திலுள்ள வயல்களில் பயிர்களை அறுவடை செய்த பின்பு பயிறுக்கேற்றவாறு சுழற்சி முறையில் கோழிகளை வளர்க்க உபயோகப்படுத்தலாம். எல்லா விதமான கோழியினங்களையும் இந்த முறையில் வளர்க்கமுடியும். இம்முறை ஆர்கானிக் முட்டை உற்பத்திக்கு பொதுவாக உபயோகப்படுத்தப்படுகிறது.
இம்முறையில் கோழி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
** குறைந்த முதலீடு
** அமைக்கத் தேவைப்படும் செலவு குறைவு.
** கோழிகள் புல்தரையிலிருந்தே போதுமான அளவு தீவனத்தை உட்கொண்டு விடுவதால் அவற்றுக்குத் தேவைப்படும் தீவனத்தின் அளவு குறைவு.
** மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுகிறது.
இம்முறையில் கோழி வளர்ப்பதால் ஏற்படும் தீமைகள்
** அறிவியல் ரீதியான மேலாண்மை முறைகளைப் பின்பற்ற முடியாது.
** கோழிகள் முட்டைகளை அடர்த்தியான புல்வெளிகளில் இட்டுவிடுவதலால் கோழிகளுக்காக தனியான கூடுகள் அமைக்காத வரையில் முட்டைகளை சேகரிப்பது கடினம்.
** மற்ற விலங்குகள் கோழிகளைத் தாக்குவதால் ஏற்படும் இழப்பு அதிகம்.
** முறையாக கவனிக்காவிடில் வனப்பறவைகள் மூலம் நோய்கள் பரவுவது எளிது.