இலைக்கருகல் நோய்
இலைக்கருகல் நோய் அதிக மழை மற்றும் காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும் போது அதிகமாக காணப்படும். ஆல்டர்னேரியா சிசாமி என்ற பூசண வகையினால் இந்நோய் உண்டாகிறது. நோயின் அறிகுறிகள் செடியின் அனைத்து பகுதிகளிலும் தென்படும்.
அதாவது இலை, இலைக்காம்பு, தண்டுப்பகுதிகளிலும் ஏற்படும். ஆரம்ப நிலையில் சிறிய பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகள் மேல் அடுக்கடுக்காக ஒன்றின் மேல் ஒன்றான வளையங்கள் உண்டாகும்.
பின் ஒன்றோடொன்று இணைந்து இலையின் முழுப் பகுதியும் காய்ந்து உதிர்ந்து விடும். நோயின் தாக்குதல் தீவிரமாகும்போது நீரில் ஊறிய அடர் பழுப்பு நிறமான கோடுகள் தண்டு, கணுப்பகுதி மற்றும் காய்களின் மேல் தோன்றும்.
பாதிக்கப்பட்ட காய்களானது விதை நிரம்பாமல் காய் இலப்பு குறைகிறது. மேலும் அதிக இலையுதிர்தல் மற்றும் தண்டுப்பகுதி பாதிப்பினால் செடிகள் வலுவிழந்து காய்ந்து போய்விடும்.
நோய் நிர்வாகம்:
இந்நோய் வராமல் தடுக்க ஒரு கிலோ விதைக்கு கார்பன்டாசிம் 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்ட உதிர்ந்த இலைகளை எடுத்து எரித்து விட வேண்டும்.
வளரும் பருவத்தில் தாமிர ஆக்சிகுளோரைடு ஒரு லிட்டர் தண்ணீர் 2.5 கிராம் அல்லது அசாக்சிஸ்ட்ரோபின் ஒரு கிராம் ஒரு லிட்டர் அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.