சாண எரிவாயுக் கலன் நிறுவ முக்கியமான தேவை மாடுகள்:
சாண எரிவாய் கலன் நிறுவ விரும்பும் தனிப்பட்டவர் அல்லது ஸ்தாபனத்திடம் போதுமான கால்நடைகள் இருக்கவேண்டும். அதுவும் கூடியவரை தொழுவத்தில் நிற்கக்கூடியவைகளாக இருக்கவேண்டும்.
மேய்ச்சலுக்குப் போகக்கூடிய கால்நடைகளாக இருந்தால், மேய்ச்சல் நிலத்திலேயே சாணம் விழுந்துவிடும். அவைகளிடமிருந்தும் கூட இரவு நேரத்தில் தொழுவத்தில் சாணம் கிடைக்கும். ஆனால் அப்படி எவ்வளவு சாணம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் 45 கிலோவுக்கு குறையாத பசுஞ்சாணம் கிடைக்காவிட்டால், மிகமிகச் சிறிய காஸ் இயந்திரம் நிறுவுவது கூடக் கட்டுப்படியாகாது. அந்த அளவிலாவது சாணம் கிடைத்தால், இரண்டு கன மீட்டர் (60 கன அடி) காஸ் இயந்திரத்தை நிறுவ முடியும்.
ஒரு நடுத்தரப் பசு அல்லது எருமை அல்லது காளை சராசரியாக நாள்தோறும் போடும் பசுஞ்சாணம் 10 கிலோ என்று வைத்துக் கொள்ளலாம். கொங்கணம் அல்லது அஸ்ஸாம் அல்லது மற்ற மலைப் பகுதிகளில் உள்ளது போல் மிகச்சிறிய மாடாக இருந்தால், சாணம் மிகவும் குறையும்.
மிகப்பெரிய எருமைகள் ஒரு நாளைக்கு 20 கிலோ வரை சாணம் போடக்கூடும். ஆனால் இவைகளெல்லாம் தொழுவத்தில் இருக்கும் கால்நடைகளுக்கான கணக்குதான். இதைத் தவிர முற்றிலும் மலத்தைக் கொண்டே உரம், காஸ் தயாரிக்கக்கூடிய இயந்திரங்களும் இருக்கின்றன.
அவைகளில் மிகச்சிறிய காஸ் இயந்திரத்திற்குக் குறைந்தது வயது வந்த 60 பேர் இருக்க வேண்டியது அவசியம். விடுதியில் அல்லது பொது கக்கூஸ் இருக்கும் இடங்கள் போன்றவற்றில் தான் இது சாதாரணமாக சாத்தியமாகும்.
அங்கும் கூட சேர்க்கப்படும் தண்ணீரின் அளவு ஒரு முக்கியமான அம்சமாகும். ஒருவர் மலம் கழிக்கும் போது ஒரு லிட்டருக்கும் மேல் தண்ணீர் செலவழிக்கக் கூடாது. இல்லையேல் தண்ணீர் அதிகமாகி நன்றாக நொதிப்பதில்லை.
எத்தனையோ அம்சங்கள் வேறுபடுவதால், இத்தனை மனிதர்கள் அல்லது கால்நடைகள் தாம் வேண்டுமென்று சரியாகக் கூறமுடியாது. ஆனாலும் இரண்டு கனமீட்டர் காஸ் இயந்தித்தை நிறுவுவதற்குச் சராசரியாக சுமார் 3 கால்நடை அல்லது 60 பேர் அவசியமாகும் என்று சொல்லலாம். எண்ணிக்கை அதிகமாகும் அளவிற்கு பெரிய காஸ் இயந்திரம் நிறுவலாம்.
சாணம் அல்லது மலம் தவிர, தோலுரிக்கும் இடங்களில் கழிவுப் பொருள்கள் போதுமான அளவு கிடைப்பதாக இருந்தால், அங்கும் காஸ் இயந்திரம் நிறுவமுடியும். அப்படிப்பட்ட இடங்களில், இறந்த கால்நடைகளின் வயிற்றில் இருந்த சாணம், தோல் உரிக்கும் போது கிடைக்கும் கழிவுப் பொருள்கள் ஆகியவைகளை காஸ் இயந்திரத்தில் போடலாம்.
பன்றி வளர்க்கும் இடங்கள், கோழிப் பண்ணைகளில் அவைகள் போடும் மலம், எச்சம் ஆகியவை போதுமான அளவு கிடைப்பதாக இருந்தால் அவற்றை இதற்காக உபயோகப்படுத்தலாம்.