தரமான நாட்டுக் கோழி குஞ்சுகளை பெற இயற்கை முறையில் அடைக்கு விட்டாலே போதும்.
இன்குபேட்டர் பயன்படுத்தினால் 80 சதவிகிதம் வரைதான் பொரிப்புத் தன்மை இருக்கும். அதிக கோழிகள் வைத்திருப்பவர்கள் முட்டைகள் வீணாகாமல் இருக்க இன்குபேட்டரைப் பயன்படுத்தலாம். செலவே இல்லாமல், தரமான குஞ்சுகளைப்பெற இயற்கை முறைதான் ஏற்றது.
ஒரு நாட்டுக்கோழி அதிகபட்சம் 15 முட்டைகள் வரை இடும். முதல் ஆறு நாள்கள் இடும் முட்டைகளை விற்பனைக்கோ, உண்பதற்கோ பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏழாம் நாள் முதல் பதினைந்தாம் நாள் வரை இடும் ஒன்பது முட்டைகளை மட்டுமே அடை வைக்க வேண்டும்.
இப்படி வைக்கும்போது ஒன்பது முட்டைகளும் பொரிந்துவிடும். கோழி முட்டையிட்ட ஆறு முதல் ஒன்பது நாள்களுக்குள் அடை வைத்தால்தான் பொரிக்கும். அதற்கு மேல் முட்டைகளுக்குப் பொரியும் திறன் இருக்காது.
அதனால், ஆரம்பத்தில் இட்ட முட்டைகளைத் தவிர்த்துவிட்டுக் கடைசி ஒன்பது நாள்கள் இட்ட முட்டைகளை அடை வைக்க வேண்டும். ஆனால், இன்குபேட்டரில் அத்தனை முட்டைகளையுமே பொரிக்க வைக்கலாம்.
அடை வைக்க பிரம்புக்கூடைகளைப் பயன்படுத்துவதான் சிறந்தது. பிரம்புக்கூடையைச் சாணத்தால் மெழுகி விட்டால் ஓட்டைகள் அடைபட்டுவிடும். கூடையில் சிறிது சாம்பல் கலந்த செம்மண்ணைக் கொட்ட வேண்டும். கூடையின் விளிம்பிலிருந்து ஐந்து விரற்கடை அளவு கீழே இருக்குமாறு மண்ணால் கூடையை நிரப்பவேண்டும்.
அதன்பிறகு. கூடையில் ஒர் இரும்புத்துண்டு (இடி தாக்காமல் இருக்க), மூன்று காய்ந்த மிளகாய்கள் (பூச்சிகளை விரட்ட), நான்கு கரித்துண்டுகள் (ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ள) ஆகியவற்றைப் போட்டு, முட்டைகளை அடுக்கிக் கோழியை அடைக்குப் படுக்க வைக்க வேண்டும்.
மணல் வெப்பத்தைக் கீழே கடத்திவிடும் என்பதால், மணலைப் பயன்படுத்தக்கூடாது. செம்மண் வெப்பத்தைத் தக்க வைக்கும் என்பதால் செம்மண்ணைத்தான் பயன்படுத்த வேண்டும்.