கடலை எண்ணையை விட வட இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது கடுகு எண்ணெய்.
கடுகு பெரும்பாலும் வட மாநிலங்களில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் கடுகு பயிரிடுவது குறைவாகவே காணப்படுகிறது. அதிக சத்துக்கள் தேவைப்படாத ஒரு பயிர்.
undefined
கடுகில் பல ரகங்கள் இருந்தாலும் தனியார் ரகங்கள் மிகவும் பிரபலமானவை. தென்னிந்தியாவில் கடுகு ஊடுபயிராக வேர்க்கடலை மற்றும் உளுந்து பயிர்களுடன் அதிகம் பயிரிடப்படுகிறது.
ஏக்கருக்கு பத்து டன் தொழு உரத்தை கடைசி உழவில் இட்டு பின் விதைக்க வேண்டும். மணல் உடன் விதையை கலந்து விதைக்கும் பொழுது சரியான அளவில் முளைக்கும்
கடுகு பயிரிட மார்கழி மாதம் ஏற்ற பருவம் ஆகும். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் காலத்தில் நல்ல விளைச்சல் பெறலாம். இருபது நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
கடுகின் வயது 90 முதல் 100 நாட்கள் வரை. பாரம்பரிய ரகங்கள் உயரமாகவும் வீரிய ரகங்கள் உயரம் குறைவாகவும் வளரும். கடுகு செடிகளில் கிளைகள் அதிகம் இருக்கும். இதனால் மகசூல் அதிகம் கிடைக்கும்.
கடுகில் நுனி கிள்ளி விட்டால் அதிக கிளைப்புக்கு வாய்ப்பு உண்டு. கடுகு செடியின் வளர்ச்சி விரைவாக இருப்பதால், விதைத்த இருபது நாளில் களை எடுப்பது அவசியம். தண்ணீர் அதிகமாக தேங்கினால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.
கடுகு பயிரில் பூச்சி தாக்குதல் சற்று குறைவு. கடுகை பெரும்பாலும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்குகின்றன. இதனை கட்டுப்படுத்த கற்பூரகரைசல் தெளிக்கலாம். கற்பூரகரைசல் தெளிப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சி முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
கற்பூரகரைசல் தெளிப்பதால் அதிகமான பூக்கள் தோன்றும். செடியின் வளர்ச்சி வேகமாக இருக்கும். இயற்கை கரைசல்களை தண்ணீரில் கலந்து பாய்ச்சும் போது திரட்சியான காய்கள் கிடைக்கும். உயிர் உரங்களை தொழு உரத்தில் கலந்தும் இடலாம்.
வேர்க்கடலை பயிரில் ஊடுபயிராக கடுகு விதைக்கும் போது கடுகு செடிகளின் அருகில் இருக்கும் நிலக்கடலை செடிகளில் காய்கள் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் கடுகு செடி வேகமாக தேவையான சத்துகளை உறிஞ்சி விடுகிறது. உயிர் உரங்களை தொழு உரத்தில் கலந்தும் இடுவதால் இரு பயிர்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
அறுவடை காலம் வரும் பொழுது செடிகள் மஞ்சள் நிறத்தில் மாறி விடும். அப்படியே அறுத்து சிறிய கட்டுகளாக கட்டி வெயிலில் உலர்த்தி ஒரு குச்சியை கொண்டு தட்டினால் எளிதாக காய்கள் உடைந்து கடுகு விதைகள் கொட்டி விடும்.
கடுகு இல்லாத சமையல் நம் நாட்டில் இல்லை. அதனால் நிலையான சந்தை விலை உள்ள ஒரு பயிராகும். கடுகு புண்ணாக்கு நல்ல தழைச்சத்து உள்ள ஒரு உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.