ADT-37 (ஆடுதுறை 37) நெல் குறுகிய கால நெல் ரகங்களில் முக்கியமான ரகம். இட்லி அரசி என்றும் இதற்கு பெயர்.
ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக தொடர்ந்து தென் இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது.
undefined
ஆடுதுறை 37 நெல்லின் ஆயுட்காலம் 110 நாட்கள். இருபது நாட்கள் ஆன நாற்றுகள் நடுவது நல்லது. செம்மை நெல் சாகுபடி முறை சிறந்தது. இயந்திர நடவு முறையில் நல்ல மகசூல் கிடைக்கும்.
ரபி (மார்கழி இறுதி தை மாதம் முதல் வாரங்கள்) மற்றும் கரீப் (சித்திரை பட்டம்) பட்டங்களில் நடவு செய்யலாம். பின்சம்பா (சம்பா பட்டம் முடிந்த பிறகு) பட்டத்திலும் நடலாம். இது குறுகியகால பயிராவதால் சம்பா பட்டத்தில் நடவு செய்ய இயலாது.
நாற்று பாய் நாற்றங்கால் முறையில் விடும் போது பாலித்தீன் பாய் விரிக்காமல் அடியில் இரண்டு இஞ்ச் அளவு வைக்கோல் பரப்பி விட்டுவிடுங்கள். அதன் மீது மண், தொழுஉரம் இரண்டும் கலந்து பரப்பி நெல் மணிகள் தூவி பின்னர் வைக்கோல் மூடாக்கு இடலாம்.
ஐந்தாம் நாள் மூடாக்கு நீக்கினால் நெல் மணிகள் நன்கு முளைத்து இருக்கும். மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரில் கலந்து பாய்ச்சும் போது கரும்பச்சை நிறம் மற்றும் அதிக நீளமான வேர்கள் கிடைக்கும்.
நாற்று பறிக்கும் போது அடியில் இருக்கும் வைக்கோலை அசைத்து நாற்றுகளை எளிதாக பறித்துக் கொள்ளளாம். நாற்றுகளில் வேர்கள் நீளமாக இருப்பதால் நட்ட ஐந்தாம் நாள் கரும் பச்சை நிறத்தில் காணப்படும். அதிக கிளைப்புகள் தோன்றும்.
குறுகிய நாள் ரகம் ஆதலால் அதிக அளவு சத்துக்கள் தேவைப்படும். மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலில் நுன்னுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, வேம் மற்றும் மெத்தைலோ பாக்டீரியா இவற்றை கலந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தொடந்து பாசன நீரில் கலந்து விட வேண்டும்.
தேவைப்பட்டால் மீன் அமிலம் தெளிக்கலாம். அல்லது ஏக்கருக்கு இரண்டு முதல் ஐந்து லிட்டர் மீன் அமிலம் பாசன நீரில் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் உடன் கலந்து விடலாம்.
ஆடுதுறை 37 நெல்லை அதிகம் தாக்கும் நோய்கள் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் குருத்து பூச்சிகள். சில சமயம் வைரஸ் தாக்குதல்.
கற்பூரகரைசலை நாற்று பருவத்தில் ஒரு முறை. கிளைப்பு பருவத்தில் மற்றும் கதிர் வரும் சமயம் ஒரு முறை தெளித்தால் மேற்சொன்ன நோய் தாக்குதல்களை முற்றிலும் தடுக்கலாம்.
ஐம்பதாவது நாள் முதல் கதிர்கள் தென்படும். தொன்னூறாவது நாள் அறுவடை செய்யலாம். அதிக பட்ச விளைச்சல் ஏக்கருக்கு நாற்பது (76 kg) மூட்டைகள் கிடைக்கும். சந்தையில் இதன் விலை சன்ன ரகங்களை விட சற்று குறைவாக இருந்தாலும் நிலையான சந்தை வாய்ப்பு உள்ளது.