தென்னை - தஞ்சாவூர் வாடல் நோய்:
இந்த நோய் தாக்கப்பட்ட மரங்களின் தண்டுப் பகுதியில் அடிப் பாகத்தில் சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் சாறு வடியும். இம்மாதிரி சாறு வடிதல் நோயின் தன்மை அதிகரிக்கும் பொழுது 15 அடி உயரம் வரை செல்லும். சாறு வடியும் பகுதிகளில் தண்டு பகுதி அழுகியும், நிறம் மாறியும் காணப்படும்.
சாறு வடிதல் ஆரம்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே மரத்தின் வேர்ப்பகுதி இந்நோயால் தாக்கப் பட்டிருக்கும். சில சமயங்களில் சாறு வடியாமலேயே மரம் வாடுதலும் உண்டு. மேலும் அடி மட்டைகள் காய்ந்து தொங்கும். குருத்து இலைகள் நன்றாக விரியாது.
காற்று வேகமாக வீசும் பொழுது குருத்து ஒடிந்து விழுந்து மரம் மொட்டையாக நிற்பதுடன் குறும்பைகள் உதிரும், காய்ப்புக் குறையும். கடைசியில் மரமே பட்டு விடும்.
தடுப்பு முறைகள்:
இந்நோயைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மக்கிய தொழு உரம் 50 கிலோவுடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து இட வேண்டும்.200 உறி மட்டைகளை மரத்தை சுற்றி 4 அடி ஆரமுள்ள வட்டத்தில் 2 அடி ஆழத்தில் மண்ணில் புதைப்பதும் நோயின் கடுமையைக் குறைக்க உதவுகிறது.
கோடை காலத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்சுவதாலும் இந்நோயின் வீரியத்தை குறைக்க முடியும்.
போர்டோ கலவை 1% என்ற பூசணக் கொல்லியை மரத்திற்கு 40 லிட்டர் என்ற அளவில் 3 மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து குறைந்த பட்சம் 3 முறையாவது மரத்தைச் சுற்றி ஊற்றினால் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.