15 சதவீதம் விளைச்சலை அதிகரிக்க வேர் பூசணம் செய்யலாம்…

 
Published : Feb 07, 2017, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
15 சதவீதம் விளைச்சலை அதிகரிக்க வேர் பூசணம் செய்யலாம்…

சுருக்கம்

வேர் பூசணங்கள் இரு வகைப்படும். அவை “வேர் உட்பூசணம்’, “வேர் வெளி பூசணம்’ ஆகும்.

“வேர் உட்பூசணம்’ என்பது பயிர்களின் வேர்களின் உள்ளே சென்று பயிர்களின் வளர்ச்சியின் செயல்பாட்டுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பயிர்களுக்கு தேவையான நீர், மணிச்சத்து, கந்தகம், தாமிரம் ஆகியவைகளை எளிதாக பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவுவது ஆகும்.

“வேர் வெளி பூசணம்’ என்பது பயிர்களில் உள்ள வேர்களின் மேற்பரப்பில் ஒட்டி கண்ணுக்குத் தெரியாத படலமாக வளர்ந்து பயிர்களுக்குத் தேவையான நீர், மணிச்சத்து, துத்தநாகம், தாமிரம் ஆகியவைகளை எளிதாக பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவுகிறது.

இவ்விரண்டு வகைகளில் பயிர்களுக்கு அதிகமான பலனைக்கொடுப்பது “வேர் உட்பூசணம்’ ஆகும்.

ஆர்பஸ்குலார் மைக்கோரைசாவின் வித்துக்கள் மண்ணில் வாழ்கின்றன. இவ்வித்துக்கள் ஏற்ற சூழ்நிலையில் முளைத்து நூலிழை போன்ற வடிவில் பயிர்களின் வேர்களை நோக்கி பரவுகின்றன. வேர்களை அடைந்ததும் வேர்களின் செல்களுக்குள் ஊடுருவிச் சென்று ஆபெஸ்கியூல், வெஸிக்கிள் என்ற தனக்கே உரிய சிறப்பு வடிவமைப்புக்களை உருவாக்குகின்றன.

மேலும் அவை வேரிலும் மண்ணிலும் அடர்ந்து பரவி வெகுதூரம் வரை சென்று மண்ணில் உள்ள மணிச்சத்து, இதர சத்துக்களையும் நீரையும் உறிஞ்சி ஒரு குழாய் போல செயல்பட்டு நேரடியாக வேரின் செல்களுக்கு வழங்குகின்றன.

இதன்மூலம் வேர்களின் உறிஞ்சும் திறன் அதிகரிப்பதோடு நூலிழைகள் பரவியிருக்கக் கூடிய மண்ணின் அளவும் அதிகப்படுத்தப்படுகின்றது.

வேர் உட்பூசணம் செய்யும் முறை:

உழவர்கள் தங்கள் நிலத்திலேயே எளிதாக தயார் செய்யலாம். 6’x2’x2′ என்ற அளவுக்கு குழி அல்லது தொட்டியினை அமைக்க வேண்டும். அதில் பாலிதீன் தாளினை விரிக்க வேண்டும். வெர்பிகுலைட் என்ற களிமண் தாதினை 450 கிலோ, கிருமி நீக்கம் செய்யப்பட்ட வயல் / தோட்டத்தின் மண் 50 கிலோ கலந்து குழியின் முக்கால் பாகத்திற்கு நிரப்ப வேண்டும்.

இவ்வாறு நிரப்பப்பட்ட மண்ணின் மீது 25 கிலோ (5 சதம்) அளவுக்கு வேர் உட்பூசண தாய் வித்தினைத் தூவி நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு கலக்கப்பட்ட மண் குழியின் மேற்பரப்பில் 10 செ.மீ. இடைவெளியில் பார் அமைத்து 5 செ.மீ. இடைவெளியில் சுத்தம் செய்யப்பட்ட சோளம் அல்லது மக்காச்சோள விதையை விதைக்க வேண்டும்.

இப்பயிர் வேர்களின் மூலம் தாய் வித்துக்களின் உதவியுடன் பன்மடங்காக வளர்ச்சி அடைந்து மண் குவியல் அனைத்தும் வேர் உட்பூசணமாக மாறும்.

விதைக்கப்பட்ட சோளத்தின் வளர்ச்சிக்காக 20 கிராம் யூரியா, 45 கிராம் சூப்பர் பாஸ்பேட், 15 கிராம் பொட்டாஷ் ஆகியவற்றினை அடியுரமாகக் கொடுக்க வேண்டும். விதைத்த 7ம் நாளில் 3 கிராம் நுண்ணூட்டக் கலவையை இடவேண்டும். விதைத்த 30ம் நாளில் 15 கிராம் யூரியாவையும் இடவேண்டும். குழி அல்லது தொட்டியின் ஈரப்பதம் 60 சதவீதத்திற்கும் குறையாமல் பாதுகாக்க வேண்டும்.

கோழி, எலி, பறவைகளால் பாதிக்கப்படாமல் இருக்க கோழி வலையைக் கொண்டு மூடிவைக்க வேண்டும். இவ்வலையினை 20ம் நாள் எடுத்துவிட வேண்டும். தொட்டியில் வளரும் செடி 60 நாட்களுக்கு இருக்க வேண்டும். பின்னர் செடியின் தண்டுப்பகுதியை முழுவதுமாக நீக்கிவிட வேண்டும்.

வேர்ப்பகுதியை சிறு சிறு துண்டுகளாகக் குழியில் உள்ள வெர்மிகுலேட்டுடன் நன்கு கலக்க வேண்டும். இதனால் வேர் உட்பூசண உரம் குழியில் உள்ள அனைத்து மண்ணும் சீராக பரவி முழுமையாக கிடைக்கும்.

நீர் பாய்ச்சியபின் மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது பயிர்களின் வேர் மண்டலத்திற்கு அருகில் வேர் உட்பூசணத்தை பயிர்களுக்கு 50 கிராம் வீதமும், பெரிய மரங்களுக்கு 200 கிராம் வீதமும் பயன்படுத்தலாம். நாற்றங்காலில் ஒரு சதுரமீட்டருக்கு 100 கிராம் வேர் உட்பூசணம் இட்டால் போதும்.

விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் மண்ணிற்கு கீழே 5-6 செ.மீ. ஆழத்தில் இடவேண்டும். மரங்களுக்கு ஒரு மரத்திற்கு 50-200 கிராம் வேர் உட்பூசணம் இட்டு மண் அணைக்க வேண்டும். மஞ்சள், இஞ்சி, மிளகாய், காய்கறி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 25 முதல் 250 கிலோ போதுமானது.

தென்னை மரம் ஒன்றுக்கு 250-500 கி வரை இடலாம். பருத்திக்கு எக்டருக்கு 50 கிலோ என்ற அளவில் இடலாம்.

வேர் உட்பூசணம் வேரைத்தாக்கும் நோய், நூற்புழுக்களின் தாக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

வேர் பூசணம் பயிர் வளர்ச்சியினை ஊக்குவிப்பதால் 10-15 சதம் விளைச்சல் அதிகரிக்கும்.

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!