தமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மண், வளம் குறைந்ததாகவும் களர் உவர் தன்மையின் பாதிப்பு உள்ளதாகவும் காணப்படுகிறது.
இப்பகுதிகளில் கிடைக்கும் பாசனநீர் பெரும்பாலும் தரம் குறைந்ததாக, பலவித உப்புக்கள் கொண்டதாக, குறிப்பாக விவசாயப் பயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சோடியம், மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடு, கார்பனேட், பைகார்பனேட், சல்பேட் கொண்டதாக இருக்கின்றன.
இப்பகுதிகளில் பருவமழை பொய்த்துவிடும் காலத்தில் ஏற்படும் வறட்சியாலும் பயிர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன.
கடலோரப் பகுதிகளில் 40-45 சதவீதம் மானாவாரி நிலங்களாக உள்ளன. இப்பகுதிகளில் விவசாயிகள் பழமரங்களை சாகுபடி செய்தால் நிலையான வருமானம் பெறமுடியும்.
இலந்தை, பெருநெல்லி, சப்போட்டா, மா, கொய்யா, புளி, சீத்தா, நாவல், கொடுக்காபுளி, வில்வம் ஆகிய பழமரங்கள் கடலோர பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்ற மரங்களாகும்.
இலந்தை:
மானாவாரி பழ மரங்களின் அரசன் என்றுஅழைக்கப் படும்இலந்தை களர், உவர் நிலங்கள், வறட்சியான நிலங்கள், நீர் தேங்கும் நிலங்கள் என்று அனைத்து பிரச்னைக்குரிய நிலங்களிலும் நன்கு வளர்ந்து விளைச்சலை தரவல்லது.
இலந்தை கார, அமிலத்தன்மை 9 வரையில் நன்கு வளரும். அதிக விளைச்சல் தரும் ரகங்கள் கைத்தளி, பனாரசி, உம்ரான், கோலா செப், முண்டியா ஆகியவை பயிரிட ஏற்றவை.
பழத்தோட்டம் அமைக்கும் போது இரண்டுக்கும் மேற்பட்ட ரகங்களை பயிரிடுவது மிகவும் அவசியம்.
மொட்டுக் கட்டப்பட்ட செடிகளை 6 சதுரமீட்டர் இடைவெளியில் 1 மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் நடவேண்டும்.
முறையான கவாத்தை பிப்ரவரி – மார்ச் மாதங்களில் செய்யும்போது ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை பழங்கள் கிடைக்கும்.
மரத்திற்கு 60-70 கிலோ பழங்கள் விளைச்சலாக கிடைக்கும். பழங்கள் மிகவும் சத்துமிக்கவை. பழரசம், ஊறுகாய், ஜாம், மிட்டாய், ஜெல்லி ஆகியவை தயாரிக்கப் படுகிறது.
புளி:
கடலோர சாகுபடியில் அங்கம் வகிக்கும் முக்கியமான மரம் புளி ஆகும். வறட்சி மற்றும் களர், உவர் நிலங்களிலும் நன்கு வளரும். விதைகள் மூலமும் ஒட்டுச்செடிகள் மூலமும் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது. ஒட்டுச்செடிகள் 5 வருடங்களில் பலன் அளிக்கத் தொடங்கும்.
ஒட்டுச்செடிகள் 8 மீ இடைவெளியில் 75 செ.மீ. நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் நடவேண்டும்.
மானாவாரியாக பயிரிடுவதைவிட இறவையில் பயிரிடும்போது அதிக விளைச்சல் அளிக்கக்கூடியது.
ஒரு மரத்திலிருந்து 150 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். பி.கே.எம்.1 என்ற ரகம் அதிக விளைச்சலை தரவல்லது.
கொடுக்காபுளி:
கொடுக்காப்புளியை காற்றுத் தடுப்பாகவும், மண் அரிப்பைத் தடுக்கவும் பயன்படுத்தலாம். செடிகள் பொதுவாக விதைகளிலிருந்தோ அல்லது பதியன்கள் மூலமாகவோ இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
செடிகள் 8 முதல் 10மீ இடைவெளியில் 1மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் நட ஏற்றது.
நன்கு வளர்ந்த மரங்கள் மரம் ஒன்றுக்கு 30 கிலோ பழங்கள் வரை அளிக்கின்றன.
மரங்கள் பெரும்பாலும் ஜனவரி மாதங்களில் பூத்து, ஏப்ரல், ஜூன் மாதங்களில் அறுவடைக்கு வருகின்றன.
சதைப்பற்றுள்ள பழங்கள் அவற்றின் சுவைக்காக விரும்பி உண்ணப்படுகின்றன.
விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்பு தயாரிக்க பயன்படுகிறது. புண்ணாக்கு மற்றும் இலைகள் கால்நடைத் தீவனமாக பயன்படுகிறது.
வில்வம்:
மருத்துவ குணம் நிறைந்த வில்வமரம் பிற பயிர்கள் வளர முடியாத இடத்திலும் மிதவெப்ப பகுதிகளிலும் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சல் அளிக்கக்கூடியது.
அதிகமான கார அமிலத்தன்மை உடைய நிலங்களிலும் அதிகமான ஈரக்கசிவு உள்ள இடங்களிலும் வளரக் கூடியது. சிறந்த சாகுபடிக்கு மணற் பாங்கான நிலம் ஏற்றது. மொட்டுக் கட்டுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
செடிகளை 8 மீட்டர் இடைவெளியில் 1 மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் நடவேண்டும். மொட்டுக்கன்றுகள் 4 முதல் 5 வருடங்களில் பலன்தர ஆம்பிக்கின்றன.
மரம் ஒன்றுக்கு 700 கிலோ வரை விளைச்சல் கிடைக்கிறது.
பழங்கள் சர்பத், மார்மலேடு செய்ய பயன்படுகிறது. மரம் வேளாண் கருவிகள் செய்யவும் மரக்கூழ் காகிதம் செய்யவும் பயன்படுகிறது. இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருநெல்லி:
வறட்சி, கரிசல் நிலங் களில் வளர்ந்து நல்ல பலன் தரவல்லது. செம்மண், மணற் பாங்கான நிலங்களிலும் வளரும் தன்மையுள்ளது.
பனாரசி, சாக்கையா, கிருஷ்ணா, காஞ்சன், என்.ஏ.7 ஆகியவை சிறந்த ரகங்களாகும். மொட்டுக்கட்டப்பட்ட செடிகள் 5 முதல் 6 மீ இடைவெளியில் 1 மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் நடவேண்டும்.
1 மீ உயரம் வரை ஒரே குச்சியாக வளர்த்து பின்னர் அனைத்து திசைகளிலும் கிளைகளைப் பரவ விடவேண்டும்.