இந்த காய்கறிகளில் உயர் விளைச்சல் பெற நவீன தொழில்நுட்பங்கள் அவசியம்...

 |  First Published Feb 2, 2017, 1:27 PM IST



மிளகாய், தக்காளி சாகுபடியில் உயர் விளைச்சல் பெற நவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

மிளகாய்:

Latest Videos

undefined

மிளகாய்ச் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற சரியான ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். கோ-1, கோ-2, கே-1, கே-2, எம்.டி.யு.-1, பி.கே.எம்.-1, பாலூர்-1 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.

ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது காப்டான் 2 கிராம் என்ற அளவில் விதைகளுடன் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் விதைக்க வேண்டும். மேலும், அசோஸ்பைரில்லம் 400 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையை 25 சதம் வரை குறைக்கலாம்.

குழித்தட்டு முறையில் நாற்றங்கால் மூலம் நல்ல தரமான நாற்றுகளைப் பெறலாம். நோய், பூச்சி தாக்குதல் இல்லாத நாற்றுகளைப் பெறுவதற்கும் சிறந்த வழியாக இருக்கும். அடியுரமாக தொழு உரம் 25 டன், யூரியா 30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 20 கிலோ இட வேண்டும். மேல் உரமாக 30 கிலோ யூரியாவை முறையே 30, 60, 90ஆவது நாள்களில் இட வேண்டும்.

பயிர் ஊக்கிகள்:

பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும், நட்ட 60 அல்லது விதைத்த 100-ஆவது நாளில் ஒரு முறையும், மேலும் 30 நாள்களுக்குப் பிறகு ஒரு முறையும் ஒரு லிட்டர் தண்ணீரில் டிரையகான்டினால் (1.25 மி.லி.) கலந்து தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நட்ட 15ஆம் நாள் முதல் ஒரு லிட்டர் தண்ணீரில் மீத்தைல் டெமான் (2 மி.லி.) கலந்து 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் நனையும் கந்தகம் 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.

காய் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

இதன் மூலம் மிளகாயில் உயர் விளைச்சலும், கூடுதல் லாபமும் பெறலாம்.

தக்காளி:

பி.கே.எம்-1, கே.பி.ஹெச்-1, கோ.பி.ஹெச்-2, யு.எஸ்.-618, ருச்சி, லட்சுமி ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.

உர அளவு:

மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமிடுதல் வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து நீர் வழி உரமிடுதல் மூலம் மகசூலை இரட்டிப்பு செய்ய முடியும்.

நடவு செய்த 30ஆவது நாளும், நன்றாகப் பூத்திருக்கும் நிலையிலும் 1.25 மில்லி கிராம் என்ற அளவில் வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

துல்லிய பண்ணையத்தில் வீரிய ஒட்டு ரகங்களை நடவு செய்தால் ஹெக்டேருக்கு 150 டன்கள் வரை பெற முடியும். நடவு செய்த 9 மாதம் வரை அறுவடை செய்யலாம்.

பச்சைக் காய்ப்புழு, புகையிலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.

கோடை உழவு:

கோடை உழவு செய்வதன் மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறி பயன்படுத்தியும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். டிரைகோகிரம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஹெக்டேருக்கு 50 ஆயிரம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் விட வேண்டும். குழித்தட்டுகளில் வளர்க்கப்பட்ட வாளிப்பான நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.

பழங்களை அறுவடை செய்த பிறகு அவற்றை தரம் பிரித்து பிளாஸ்டிக் கிரேடுகளில் நிரப்ப வேண்டும். பழங்களின் எடை ஒவ்வொரு ரகத்துக்கு மாறுபடும்.

எனவே, பழங்களை அளவு அடிப்படையில் விற்பனை செய்யக் கூடாது. எடை அடிப்படையில் விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெற முடியும்.

click me!