வெள்ளாட்டின் பயன்கள்
இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் செம்மறி ஆட்டு இறைச்சிக்கும், வெள்ளாட்டு இறைச்சிக்கும் அதிக வேறுபாடு காட்டப்படுவதில்லை. தமிழ் நாட்டின் பல பகுதினளில் வெள்ளாட்டு இறைச்சியே அதிகம் விரும்பப்படுகின்றது.
இதுபோன்று, மலேசியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் வெள்ளாட்டு இறைச்சியே அதிகம் விரும்பப்படுகிறது. ஆனால், முன்னேறிய மேல் நாடுகளில், வெள்ளாட்டு இறைச்சி, செம்மறி ஆட்டு இறைச்சி போல் விரும்பப்படுவதில்லை.
வெள்ளாடுகள் வெட்டப்படும்போது 50 முதல் 55% இறைச்சி கிடைக்கிறது. எனினும் கீழை நாடுகளில் அதிக அளவில் வெள்ளாட்டின் பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
செம்மறி ஆட்டு இறைச்சி மட்டன் (Mutton) எனப்படும்போது, வெள்ளாட்டு இறைச்சி செவ்வான் எனப்படுகின்றது.
வெள்ளாட்டு இறைச்சியில் உள்ள சத்துப் பொருட்கள்:
ஈரப்பதம் —- 74.2%, புரதம் —- 21.4%, கொழுப்பு —- 3.6%, தாது உப்பு —- 1.1%
வெள்ளாட்டு இறைச்சியில், செம்மறி ஆட்டு இறைச்சியைவிட அதிகச் சதையும், குறைந்த அளவு கொழுப்பும் உள்ளது.
எரு
வெள்ளாட்டுச் சாணம் சிறந்த எருவாகும். மாட்டுச் சாணத்தில் 20%க்கு மேல் எரி பொருளாக எரித்து விடப்படுகின்றது. ஆனால், ஆட்டுச் சாணம் முழுவதும் நிலத்திற்கு எருவாக மாத்திரமே பயன்படுகிறது.
மேலும், மாட்டுச் சாணத்தை மக்கச் செய்துதான் வயலில் உரமாகப் போட முடியும். ஆனால் ஆட்டுச் சாணம் உடனடியாக எருவாகப் பயன்படுத்த முடியும். இதன் காரணமாகத் தான் மாட்டுச் சாணம் மறு ஆண்டு. ஆட்டுச் சாணம் அவ்வாண்டு, எனக் குறிப்பிடப்படுகின்றது. ஆள்கூழ் முறையில் ஆடுகளை வளர்த்தால், இன்னும் அதிக அளவில் எரு கிடைக்கும்.