மானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மிளகாய் முக்கியப் பயிராகும்.
ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிக பரப்பளவில் மானாவாரியாக சாகுபடியாகிறது. இதில் சம்பா ரகங்களை விட மானாவாரி ரகங்களே அதிகம்.
மானாவாரி மிளகாய் சாகுபடியில் ஆரம்ப கால விதை முளைத்தல், இளம் செடிகளின் வளர்ச்சி ஆகியனவற்றில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் மானாவாரி நாற்றங்காலில் ஏற்படும் பயிர் இழப்பு ஆகியவையும் முக்கியப் பிரச்னைகளாகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி பயிராக சுமார் 2400 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
ரகங்களைப் பொருத்தவரை கே1,கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பயிரிடப்படுகின்றன. செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இதன் பருவமாகும். மண் நல்ல வடிகால் வசதியுடன் கூடிய இருமண்பாடு கொண்ட 6.5-7.5 வரை கார அமிலத்தன்மை உள்ள நிலம் மிளகாய்க்கு ஏற்றது.
ஏக்கருக்கு விதை அளவு 400 கிராம் போதுமானதாகும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிர் உரத்தை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து விதைத்த பின் நிலத்தில் போதுமான ஈரம் இருக்கும் போது தூவ வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 52 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ் ஆகியன இட வேண்டும்.
நன்கு பொடிபட உழுது தயார் செய்யப்பட்ட நிலங்களில் புழுதியில் விதைகளை கைவிதைப்பாக வரிசையில் பருவ மழைக்கு முன்னர் விதைக்க வேண்டும். மேலும், நடவு சாகுபடி முறையில் சிபாரிசு செய்யப்படும் உர அளவில் பாதி மட்டுமே மானாவாரி மிளகாய்க்கு இட வேண்டும்.
பயிர் முளைத்து 45ஆம் நாள் களை எடுக்கும்போது மேலுரமாக 43 கிலோ யூரியா இட வேண்டும். மேலுரம் இடும்போது மண்ணில் போதுமான அளவு ஈரம் இருக்க வேண்டும்.
பயிர் முளைத்த 30 ஆம் நாள் களை எடுக்க வேண்டும். பூக்கள் கொட்டுவதைக் குறைக்கவும், பிஞ்சுகள் உதிர்வதைத் தவிர்க்கவும், பயிர் முளைத்த 90 மற்றும் 120 ஆம் நாளில் பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி மருந்தை 4.5 லிட்டர் நீருக்கு 1. மி.லி. என்ற விகிதத்தில் கலந்து பூக்கள் மற்றும் பிஞ்சுகள் மேல் படும்படி தெளிக்க வேண்டும். வளர்ச்சி ஊக்க மருந்துடன் கலக்கும் நீர் உப்பு நீராக இருக்கக் கூடாது. நிலத்தில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்.
களை நிர்வாகத்தைப் பொருத்தவரை மிளகாய் விதை விதைத்து முதல் மழை கிடைத்தவுடன் ஹெக்டேருக்கு 1.0 லிட்டர் ப்ளுக்ளோரலின் அல்லது 3.3லிட்டர் பெண்டிமித்தலின் ஆகியனவற்றில் ஏதேனும் ஒன்றை 500 லிட்டர் நீரில் கலந்து முளைக்கும் முன் இடவேண்டிய களைக்கொல்லியாகத் தெளிக்க வேண்டும்.