பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் :
தேக்கு நட்ட ஆறு ஆண்டுகளில் பூக்க தொடங்கினாலும் நன்கு பூக்க 15 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
ஜுன் - செப்டம்பர் மாதங்களில் பூக்கத்தொடங்கி மார்ச் - ஏப்ரல் மாதங்களில் விதைகள் முற்றி கீழே விழ ஆரம்பிக்கும்.
20 வயதுடைய மரத்திலிருந்து சராசரியாக ஒரு மரத்திற்கு 10 கிலோ தேக்கு விதைகள் கிடைக்கும்.
ஒரு கிலோவிற்கு சராசரியாக 1300 விதைகள் இருக்கும்.
விதை சேகரம் :
நாற்றுகள் உற்பத்திக்கு தேக்கு வதைகளை 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய மரங்களிலிருந்து சேகரம் செய்வது நன்று.
மேலும் பக்க கிளைகள் அதிகம் இல்லாத நேராக, உயரமாக வளர்ந்த, நோய்தாக்காத மற்றும் நல்ல பருமனமான தேக்கு மரங்களிலிருந்து விதைகள் சேகரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு விதைகள் சேகரம் செய்து தோட்டம் உற்பத்தி செய்தால் நல்ல தரமான மரங்கள் கிடைக்கும்.
விதை நேர்த்தி :
தேக்கு மர விதைகளை விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். ஏனெனில் விதை உறக்க நிலை காரணமாக முளைப்புதிறன் குறைவாக இருக்கும்.
இந்த விதை உறக்க நிலையை நீக்க விதைகளை சாக்குப் பைகளில் நிரப்பி நன்றாக கட்டி சாணப்பாலில் இரண்டு நாட்கள் ஊர வைக்க வேண்டும். பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும்.
மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊர வைக்க வேண்டும். பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊர வைக்க வேண்டும்.
இவ்வாறு சுமார் ஒரு வாரம் விதை நேர்த்தி செய்வது மூலம் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தாய்பாத்தியில் விதைக்க வேண்டும்