விவசாயிகள் பண்ணைக் கழிவுகளில் இருந்து அங்கக உரம் தயாரிக்கும் முறை
மண்ணின் வளம் இயல்பாக இருந்தால் மட்டுமே பயிர் உற்பத்திக்கு ஏற்ற நிலை உருவாகும். பயிர்க் கழிவுகள், விலங்கினக் கழிவுகள் காலப்போக்கில் ரசாயன மாற்றம் அடைந்து மண்ணின் அங்ககப் பொருளாக மாற்றம் அடைகின்றன.
இந்த ரசாயன மாற்றம் ஏற்படுவதற்கு மண்ணில் இயற்கையாக உள்ள ஏராளமான நுண்ணுயிர்கள் உதவுகின்றன.
இதைத் தவிர மண் புழுக்கள், பல்வேறு பூச்சிகள், நத்தை, கரையான், எறும்பு திண்ணி போன்ற பிராணிகளும் மண்ணின் வளம் சிறக்க வழிவகுக்கின்றன.
10 டன் குப்பை உரம் 50 முதல் 70 கிலோ தழைச் சத்தையும், 15 முதல் 20 கிலோ மணிச் சத்தையும், 50 முதல் 70 கிலோ சாம்பல் சத்தையும் தரவல்லது.
திடக் கழிவுகளில் பயிர்களுக்குத் தேவையான எல்லா சத்துகளும் அடங்கி உள்ளன. இந்த பண்ணைக் கழிவுகளைச் சரியான முறையில் பயன்படுத்தினால் அதில் இருந்து அதிக சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றித் தர முடியும்.
மக்க வைத்தல்:
மக்கும் நிகழ்வின்போது, கழிவுகளின் துகள்களின் அளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. பண்ணைக் கழிவுகளை மக்கச் செய்வதற்கு முன் அவற்றை 2 முதல் 2.5 செ.மீ. கொண்டதாக நறுக்க வேண்டும்.
கரிமச் சத்து, தழைச் சத்தின் விகிதம்தான் மக்கும் காலத்தையும், வேகத்தையும் முடிவு செய்கின்றன. எனவே, கிளைரிசீடியா இலைகள், அகத்தி, தக்கைப் பூண்டு இலைகள் போன்ற பச்சைக் கழிவுகளையும், வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புல்கள் போன்ற கரிமச் சத்து அதிகமுள்ள பழுப்பு நிறக் கழிவுகளையும் சேர்த்தால் அது விரைவில் மக்கிவிடும்.
அதேபோல, கால்நடைகள், பறவைகள், பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளின் கழிவுகளிலும் தழைச் சத்து அதிகம் உள்ளது.
செயற்கை உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்களின் விலை குறைவு என்பதை விட அவற்றை விவசாயிகளே உற்பத்தி செய்ய முடியும் என்பதே தனிச் சிறப்பு.