முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன.
இதில், நாட்டு முருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடி முருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடனும் இருக்கும்.
செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள்.
செடிமுருங்கை விதை மூலமும், நாட்டுமுருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.
ஆண்டு முழுவதும் முருங்கைக்கு விலை கிடைக்காவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அறுவடை செய்யாமல் விட்டு விட்டால் முற்றி நெற்றாகும். அதில் இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம்.
ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு 240 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட காய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், விதை மூலம் கிடைத்து விடும்.
முருங்கை இலைக்கும் (கீரை) தேவை அதிகமாகவே இருக்கிறது. இதைப் பற்றி சொன்ன சடையாண்டி, “இயற்கையில விளையுற முருங்கை இலைக்கும் (கீரை), காய்க்கும் நல்ல வரவேற்பு இருக்கு. குறிப்பா முருங்கை இலைக்கு காயை விட அதிகத் தேவை இருக்கு. இலை பறித்தால் காய் மகசூல் குறையும். அதனால, விவசாயிகள் இலை விற்பனையில் கவனம் செலுத்துறதில்லை.
இலைக்காக சாகுபடி செய்றவங்க, அடர் நடவு முறையில் 5 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். 40 நாட்களுக்கு ஒரு முறை இலைகளை அறுவடை செய்து விற்பனை செய்யலாம். மதுரை மாவட்டத்துல இலைக்கான வியாபாரிகள் இருக்காங்க. இலைக்கான விற்பனை வாய்ப்பை, விசாரிச்சிட்டு, இலை சாகுபடியில் இறங்கலாம்.
தென்னைநார்க் கழிவோடு சிறிதளவு பஞ்சகவ்யா, சிறிதளவு அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து 40% ஈரப்பதம் இருப்பது போல் பிழிந்து கொள்ள வேண்டும் (ஈரமாக இருக்க வேண்டும். பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. இதுதான் ஊட்டமேற்றிய தென்னை நார்க்கழிவு).
முருங்கை மரம் பூவெடுக்கும் தருவாயில், அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியில் ஓர் இடத்தில் பட்டையை நீக்க வேண்டும். அந்த இடத்தில், ஊட்டமேற்றப்பட்ட தென்னை நார்க்கழிவை வைத்து, பிளாஸ்டிக் காகிதத்தால் காயத்துக்குக் கட்டு போடுவது போல இறுக்கமாக கட்டி வைக்கவேண்டும்.
40 நாட்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புது வேர்கள் உருவாகி இருக்கும். பிறகு, அந்தக் குச்சியை வெட்டி எடுத்து, ஊட்டமேற்றிய மண்புழு உரம் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து நீர் ஊற்றி 60 நாட்கள் வளர்த்து நிலத்தில் நடவு செய்யலாம். விவசாயிகள் இப்படி நாற்று தயாரித்து விற்பதன் மூலமும் வருமானம் பார்க்க முடியும்.