கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த சில மரங்கள் இருக்கு…

 |  First Published Jul 25, 2017, 12:58 PM IST
Some trees are used as feed for livestock.



கால்நடைகளுக்கு தீவனமாக பல மரங்களும் பயன்படுகின்றன. இப்படி பயன்படும் தீவன மரங்களை பார்க்கலாம்.

சௌண்டல், வாகைமரம், வெள்வேல், ஆச்சாமரம், புங்கை மரம் ஆகியவை மிகச்சிறந்த தீவன மரங்களாக இருக்கின்றன.

Latest Videos

undefined

இந்த மரங்களின் தழைகளில் கால்நடைகளுக்கு தேவையான புரதச்சத்து 13 முதல் 30 சதவீதம் வரை இருக்கிறது. சில மரங்களில் சத்துக்குறைவாக இருந்த போதிலும் அவற்றை மற்ற மரத்தழைகளுடன் சேர்த்து அளிக்கும் போது, கால்நடைகளுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்கின்றன.

தீவன மரங்களான சௌண்டல், கருவேல் ஆகியவற்றுக்கு இடையே தீவனப்புல் வகையான கொழுக்கட்டைப்புல், ஊசிப்புல் ஆகியவற்றை வளர்க்கும் பட்சத்தில் அவற்றிலிருந்து கிடைக்கும் தீவனத்தைக் கொண்டு 5 பெட்டை மற்றும் 1 தலைச்சேரி இன வெள்ளாடுகளை வளர்க்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தீவன மரங்களை விவசாயிகள் முக்கிய பயிராகவோ அல்லது வரப்பு ஓரங்களிலும், தரிசுநிலங்களிலும், கண்மாய் கரைகளிலும் வளர்க்கலாம்.

வேளாண் காடுகள்

தீவன மரங்களின் இலைகள் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பியதாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் பயன்படுகின்றன. உதாரணமாக, முள்ளுமுருங்கை மரத்தை எடுத்துக் கொள்ளலாம். முள்ளு முருங்கை மரங்களின் இலைகளிலிருந்து தான் மனிதர்களின் சுவாச கோளாறுகளுக்கான முக்கிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான மரங்களை ஆங்காங்கே நடும் போது அது, ஆடு, மாடுகள் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பயன்படும்படி அமைத்துக் கொள்ளலாம். நடப்படும் மரத்தின் இனத்தை பொறுத்து இந்த பயன்பாடு அமையும். பொதுவாக இது போல் தீவன மரங்களை நட்டு வளர்க்கும் இடத்தை வேளாண் காடுகள் என்று கூறலாம். ஆங்கிலத்தில் இதனை சில்விபேச்சர் என்கிறார்கள்.

வேளாண் காடுகளின் அமைப்புகள்

வேளாண்காடுகள் என்பது இயற்கையில் மிகப்பெரிய பரப்பளவில் உருவாகியிருக்கும் காடுகள் போல் அல்ல. அது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படுவது. இவற்றை கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.

1. விவசாய பயிர்கள் பயிரிடப்படும் இடங்களில் தீவன மரங்களை வளர்த்தல். அதாவது, வயல் ஓரங்கள், குளம், கண்மாய், ஏரிகளின் ஓரங்கள் என்று கிராமங்களில் பொதுவான இடங்கள் உள்பட பயிர் வளர தகுதியான இடங்களில் எல்லாம் தீவன மரங்களை வளர்ப்பது.

2. தீவனப்புல் வகைகள் மற்றும் மேய்ச்சல் தரைகள் அமைந்திருக்கும் இடத்தில் தீவன மரங்களை நட்டு வளர்த்தல். அதாவது, ஒரு விவசாயி கால்நடைகளையே தனது முக்கிய தொழிலாக கொண்டிருந்தால், அவருக்கு சொந்தமான நிலத்தில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் புல்வகைகள் சிலவற்றை பயிரிடலாம். கூடவே தீவன மரங்களையும் ஒரே இடத்தில் வளர்க்கலாம்.

3. விவசாய பயிர்களுடன் பழ மரங்களை வளர்த்தல். பல்வேறு பழமரங்களின் இலைகள் கூட கால்நடைகளின் தீவனமாக பயன்படும். இதனால், விவசாய பயிர்களுடன் பழமரங்களையும் ஆங்காங்கே நட்டு வளர்க்கலாம்.

4. மரங்கள், பழமரங்கள் ஆகியவற்றுடன் கால்நடைகளுக்கான தீவன புல்வகைகளை வளர்த்தல். அதாவது சில வகையான புற்கள் மரங்களின் அடியில் கூட எளிதாக வளர்ந்துவிடும். இந்த வகையான புற்களை ஏற்கனவே வளர்ந்து நிற்கும் மரங்கள், பழமரங்களுக்கு இடையில் பயிர் செய்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.

இப்படியான வழிவகைகளில் தீவன மரங்களையும், தீவன புற்களையும் வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் இலை, தழைகள் கால்நடைகளுக்கு எளிதான உணவாக கிடைக்கும். இதனால் தீவன செலவு பெரிதும் குறைந்து விடும். கால்நடைகளை வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் சாணம் நிலத்திற்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படும்.

இதனால் கடந்த பல ஆண்டுகளாக ரசாயன உரத்தினால் பாழ்பட்டு தற்போது தனது வளத்தை இழந்திருக்கும் தமிழகத்தின் விளைநிலங்கள் பலவும் மிகவிரைவில் பொலபொலப்பான இயற்கையாகவே சத்துள்ள நிலமாக மாறிவிடும்.

click me!