மண்ணின் வளத்தை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம்…

 |  First Published Jul 24, 2017, 1:00 PM IST
How to improve soil fertility



1.. மேல் மண் இறுக்கம்

மழைத்துளிகளால் நிலத்தில் வந்து  மோதும்போதும், டிராக்டர் போன்ற பெரிய கனஇயந்திரங்களை பயன்படுத்தும் போதும் மற்றும் இரும்பு ஆக்சைடு போன்ற ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதாலும் மண்ணில் இறுக்கம் ஏற்படுகிறது.

Latest Videos

undefined

இந்த வகை மண்ணில் நீரை பாய்ச்சினால், அந்த மண்ணின் மேல் உள்ள மண்கட்டிகள் உடைந்து சிறு துகள்களாக பிரியும். அப்போது அதில் கலந்திருக்கும் களிமண், இரும்பு ஆக்சைடுடன் சேர்ந்து கொலகொலப்பான ஒரு கட்டி போல் மாறிவிடுகிறது.

இதனை தடுத்து மண்ணின் பொலபொலப்பை அதிகரிக்க தொழுஉரம், நார்கழிவு, ஜிப்சம் இட்டு சரி செய்யலாம். இதனால் மண்ணின் நீரோட்டம் காற்றோட்டம் மற்றும் பௌதீகத் தன்மை மேம்பட்டு மண் வளமாகிறது.

ஆழமற்ற மண்

இந்த குறைபாடு இயற்கையிலேயே அமைந்தது. இதை மாற்றுவது கடினம். எனவே, இத்தகைய மண்ணில் மேல்வாரியாக வேர் பரவும் பயிர்களே நன்கு வளர வாய்ப்புள்ளது. ஒரளவிற்கு நெல் சாகுபடிக்கு ஏற்றது. மேலும் இந்த நிலங்களில் சரிவு ஏற்படாதவண்ணம் வரப்புகள் அமைத்தல் அவசியம்.

உவர் நிலம்

மண்ணில் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகள் அதிகமாக இருப்பதால் உவர் நிலம் ஏற்படுகிறது. இந்நிலங்களில் பயிர் விதைகள் முளைக்க முடியாமல் போய்விடுகிறது. இந்த இடத்தில் பூமியில் காணப்படும் நீரில் கரைந்துள்ள உப்புக்கள் அதிக அடர்த்தியாக இருப்பதால் பயிரிகளின் வேர்களால் நீரை ஈர்க்க வலுவில்லாமல் இறுதியில் பயிர் வாடி விடுகிறது.

இவை மண்ணிலுள்ள மற்றும் பாசன நீரில் உள்ள உப்புக்களால் ஏற்படுகிறது. முதலில் வயலை சமன் செய்து பின்பு நல்ல வரப்புகள் அமைத்து நீரை பாய்ச்சி தேக்கி பின்பு தொழி உழவு செய்வதால் நீரில் உப்புகள் கரைந்து விடும். இந்த நீரை வடிகால் மூலம் வெளியேற்ற வேண்டும். இது போல பல முறை செய்வதால் உவர் நிலம் நல்ல நிலமாக மாறும்.

களர் நிலம்

மண்ணிலுள்ள சோடியம் உப்புக்களின் அளவு அதிகமாகும் போது களர்நிலம் உருவாகிறது. இந்த வகை மண்ணில் காரத்தன்மை அதிகமாக காணப்படும். இத்தகைய மண்ணில் கால்சியம் சல்பேட் என்கிற ஜிப்சம் இடும் போது சோடியம் உப்புக்கள் சல்பேட் உப்புக்களுடன் சேர்ந்து சோடியம் சல்பேட்டாக நீரில் கரையும் உப்பாக மாறி வெளியேற்றப்படுகின்றது.

இது போல் பல முறை நீர் விட்டு கலக்கி பின் இருத்து வடிப்பதால் இந்த குறைபாட்டிலிருந்து மண்ணிற்கு நிவர்த்தி கிடைக்கிறது. இத்துடன் மண்ணின் வளத்தை மேம்படுத்த ஒரு முக்கிய உத்தி உண்டு. பசுந்தாள் பயிர்கள் எனப்படும் சில சிறிய வகை பயிர்களை நிலத்தில் மக்க வைத்து அவற்றை நிலத்திற்கே உரமாக மாற்றி விடலாம்.

இந்த பயிர்களில் காணப்படும் சத்துக்கள் சத்தில்லாத நிலத்தை கூட சத்து மிகுந்த வலுவான நிலமாக மாற்றிவிடுகின்றன. அதையும் இங்கு பார்க்கலாம்.

பசுந்தாள் உர பயிர்கள்

மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் தேவையான தழைச்சத்தை பெற பசுந்தாள் உரங்கள் உதவுகின்றன. பசுந்தாள் உரப் பயிர்கள் இரண்டு வகைப்படும். பயறு வகை செடிகளான செஸ்பேரியா எனப்படும் சீமை அகத்தி, சணப்பு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, தட்டைப்பயறு போன்றவை ஒரு வகை. மரப்பயிர்களான அகத்தி, கிளசிரிடியா, சுபாபுல் போன்றவை மற்றொரு வகை. இவை தவிர தானாக வளரும் கொளுஞ்சி, ஆவாரை, எருக்கு, ஆதாளை ஆகிய செடிகளும் பசுந்தழை உரமாக பயன்படுத்தப்படுகின்றன.

பசுந்தாளுரங்களை மண்ணில் இடும் போது கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் அவற்றை மக்க செய்கின்றன. அப்படி மக்கி சிதைக்கப்படும் போது இந்த செடிகளில் இருக்கும் பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் வெளியாகின்றன. இவை பயிர்கள் செழித்து வளர உதவுகின்றன.

நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரிக்கும் போது அவற்றிலிருந்து பல அங்கக அமிலங்களும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் நொதிகளும் மற்றும் சர்க்கரை பொருட்களும் வெளிப்பட்டு மண்ணில் கரையாத நிலையிலுள்ள ரசாயன உரங்களை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் படி எளிய படிவங்களாக மாற்றும். இது பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அமையும். 

பசுந்தாள் உரப்பயிர்கள் நீண்ட ஆணிவேர்கள் கொண்டவை. அதனால் மண்ணில் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று ஊட்டச்சத்துக்களை கிரகிப்பதுடன் மண்ணிற்கு காற்றோட்டம், நீர் ஊடுருவும் தன்மை அதிகரிக்க செய்கிறது.

கோடையில் இந்த உரப்பயிர்களை பயிர் செய்வதால் மண் போர்வை போல் செயல்பட்டு மண் நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு மண் ஈரத்தால் வேண்டப்படாத உப்புக்கள் கரைந்து பயிர்களின் வேர்களை தாக்காத வண்ணம் வெளியேற்றப்படுகின்றன.

எனவே பயிர் செய்யாத கோடை காலங்களிலோ, பயிர் செய்வதற்கு முன் உரிய பருவ காலங்களில் மழை நீரைக் கொண்டு பசுந்தாளுரப் பயிரினை தனிப்பயிராக விதைத்து பூக்கும் தருணத்தில் அப்படியே மடக்கி உழவு செய்வதால் மண்ணிற்கு அதிக அளவில் அங்ககச் சத்து கிடைத்து மண்வளத்தை பெருக்கலாம்.

இவ்வாறு பயிர்களுக்கு பசுந்தாள் உரங்கள் இடுவதால் உரச்செலவையும் குறைக்கலாம். இந்த முறைகளை கையாண்டு மண்ணின் குறைகளைப் போக்கி மண்ணின் வளத்தை மேம்படுத்தலாம்.

click me!