விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும் என நெல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
undefined
ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்னரும் மண்ணின் வளத்தைக் காக்கவும், மண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பசுந்தாள் உரங்களை இட வேண்டும்.
பசுந்தாள் உரத்தை நடவு செய்து 40 முதல் 45 நாள்களுக்குப் பின்னர் அதை உழவு செய்து மீண்டும் நமக்குத் தேவையான பயிரை இட வேண்டும்.
பசுந்தாள் உரப் (உயிர் பயிர்கள்) பட்டியலில் தக்கைப் பூண்டு, சணப்பை, மணிலா அகத்தி, கொளிஞ்சி, நரிப்பயிறு, கிளைரிசிடியா உள்ளிட்ட பயிர்கள் உள்ளன.
இதில் சணப்பை பயிரிடுவது குறித்து திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத் தலைவர் அகிலா கூறியது:
பயிர்களுக்கு உயிர் உரம் இடுவதில் முக்கியமானது சணப்பை. இந்தப் பயிர்கள் வேகமாக வளரக் கூடிய தழை, நார்ப்பயிர். தீவனப் பயிராகவும் வளர்க்கலாம்.
நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு சணப்பை ஏற்ற பசுந்தாள் உரமாகும்.
சணப்பை இடும் முறைகள்: அனைத்துப் பருவங்களிலும் விதைக்கலாம். மார்ச்- ஏப்ரல் மாதத்தில் விதை உற்பத்தி செய்யலாம். வண்டல் மண்ணுக்கு ஏற்றது. அனைத்து வகை மண்ணிலும் விதைக்கலாம்.
ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ முதல் 35 கிலோ வரை பயிரிடலாம். விதை நேர்த்தி அவசியமில்லை. இடைவெளி 45 ல 20 சென்டி மீட்டர் என்ற அளவில் இட வேண்டும்.
இதற்கு உரங்களும் இடத் தேவையில்லை. பயிர் பாதுகாப்பு அவசியமும் இல்லை. 30 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்தால் போதுமானது. 45 நாள் முதல் 60 நாள்களுக்கும் அறுவடை செய்து மண்ணில் மக்க வைத்து உழவு செய்ய வேண்டும்.
இதேபோல் ஒவ்வொரு அறுவடைக்கும் பசுந்தாள் உரங்களை முறையாக இட்டு பயிரிட்டால் விவசாயிகள் முழு பலன்களை அடையாலம் என்றார்