மண்வளத்தை அளிக்கும் ஏழு இயற்கை காரணிகள்; செலவு குறைவு பயன்பாடு அதிகம்...

 |  First Published Jan 23, 2018, 1:19 PM IST
Seven natural factors that provide soil moisture Excessive use is too much ..



1.. பண்ணைக்கழிவுகள்:

அன்றாடம் பண்ணையில் பலவகையான திடக்கழிவுகள் உண்டாக்குகின்றன. இவற்றில் இலைச் சருகுகள், மாட்டுத் தொழுவக்கழிவுகள், பயிர்க்கழிவுகள் மிகுதியாக உள்ளன. அவற்றை நுண்ணுயிர்களின் உதவியால் மட்கச்செய்து பயிர்ச்சத்து நிறைந்த இயற்கை உரமாக மாற்றலாம்.

2.. தொழு உரம்:

கால்நடைகளில் இருந்து கிடைக்கக்கூடிய கழிவுகளை மட்கச்செய்து பயன்படுத்துவது தொழு உரம். மாடுகள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 கிலோ சாணத்தையும், 6-7 லிட்டர் சிறுநீரையும் கழிக்கின்றன.

இவ்வாறாக ஓராண்டுக்கு 3.5 டன் சாணமும், 2500 லிட்டர் சிறுநீரும் ஒரு மாட்டிலிருந்து கிடைக்கின்றன. மாட்டின் சாணத்தைவிட சிறுநீரில் தான் தழைச்சத்து 50 சதமும், சாம்பல் சத்து 25 சதமும் அதிகம் உள்ளன. மக்கிய தொழு உரத்தில் ஒவ்வொரு 100 கிலோவிலும் தழைச்சத்து 500 கிராமும், மணிச்சத்து 300 கிராமும், சாம்பல்சத்து 500 கிராமும் உள்ளன.

3.. ஆட்டு எரு:

எந்த இன ஆடும் சராரசியாக நாள் ஒன்றுக்கு 300 கிராம் புழுக்கைகளையும், 200 மிலி சிறுநீரையும் கழிக்கின்றன. ஆட்டு எருவில் 100 கிலோவிற்கு ஒரு கிலோ தழைச்சத்து உள்ளது. தொழு எருவை விட அதிக பயிர்ச்சத்துக்கள் உள்ளன. எனவே ஆட்டுப்பட்டிகளை வயலில் அமைத்து எருவை மண்ணில் சேமிக்கலாம். இந்த ஆட்டுக்கழிவை சாண எரிவாயுக்கலன்களிலும் பயன்படுத்தி, எரி சக்தியோடும் நல்ல இயற்கை உரத்தையும் பெறலாம்.

4.. சாண எரிவாயுக்கழிவு:

சாணத்தை வரட்டியாக தட்டாமால் எரிவாயுக்கலன்களில் பயன்படுத்துவதால் மீத்தேன் வாயு என்ற எரிசக்தி கிடைப்பதுடன் சத்துக்கள் நிறைந்த சாண எரிவாயு கழிவும் கிடைக்கிறது. ஓராண்டு முடிவில் கிடைக்கும் கழிவில் 44.5, 65.9, 28 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட உரம் கிடைக்கின்றன. [3 பசு, 2 கன்றுகள்] இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், காப்பர் போன்ற நுண்ணூட்டங்களும் இதில் உள்ளன.

5.. பயிர்த்தட்டைகள்:

நெல், பயிர்த்தடைகளும் பயிரூட்டச்சத்துக்கள் கொண்டவை. இவற்றை நிலத்தில் உழுதுவிட்டால் அங்ககப்பொருட்களின் அளவு அதிகரிப்பதுமட்டுமல்லாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்கும். கரும்பு அடிக்கட்டைகளும் வேர்களும், வயல்களில் இருந்து ஹெக்டேருக்கு 13.5 டன் வரை கிடைக்கின்றன. 

இவற்றை ரோட்டோவேட்டர் கலப்பையைக்கொண்டு பொடி செய்து மண்ணில் கலந்தால் நல்ல கனிம எருவாக மாறுவதோடு ஹெக்டேருக்கு 14 கிலோ தழை, 5 கிலோ மணி மற்றும் 30 கிலோ சாம்பல் சத்தை வயலுக்கு அளிக்கமுடியும்.

6.. மண் புழு மக்கு உரம் :

மண் புழுக்களை பயன்படுத்தி இலை, தழை, கால்நடைக்கழிவுகளை மட்கச் செய்து இது தயாரிக்கப்படுகிறது. மண்புழு உரம் பேரூட்டச்சத்துக்கள் மட்டுமல்லாது கரிம பொருட்கள், நுண்ணுயிரிகள், கிரியா ஊக்கிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இது நடுநிலையுள்ள அமில, காரத்தனமையைக் கொண்டுள்ளதால், மண்ணில் உள்ள பேரூட்ட, நுண்ணூட்டச்சத்துக்கள் எளிதில் பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

7.. பசுந்தாள் உரங்கள்:

செஸ்பேனியா, கொளுஞ்சி, சணப்பு, பில்லிபெசரா, அகத்தி போன்ற பயிர்களை வளர்த்து, பூக்கும் தருணத்தில் மடக்கி உழ வேண்டும். மேலும் வேம்பு, புங்கம், கிளிசிடியா, எருக்கு இலைகளையும் சாலையோர தரிசு நிலங்களில் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளையும் வெட்டி, நிலத்தில் இடுவது பசுந்தால் உரமாகும்.

இதன் மூலம் விழிப்புணர்வைப் பெரும் விவசாயிகள், இயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்தி, மண் வளத்தை காப்பதோடு சுற்றுச்சூழலையும் காத்து, அனைத்து இனங்களுக்கும் நஞ்சில்லா உணவு வழங்க முன் வர வேண்டும்.

click me!