இயற்கை முறையில் நெல் சாகுபடி...
நெல் சாகுபடி செயற்கை வேதி உரங்கள் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் நஞ்சில்லாத நெல் சாகுபடி முறை எப்போதும் உதவும்.
நாற்றங்கால் தயாரிப்பு
தேவையான நாற்றுக்களைப் பெற போதிய இடத்தைத் தேர்வு செய்து, எளிதில் மட்கி உரமாகும் வாகை, வேம்பு, எருக்கு, கிளிரிசிடியா, நெய்வேலிக்காட்டாமணக்கு, புங்கன், ஊமத்தை, எருக்கு போன்ற இலை தழைகளை மடக்கி உழவு செய்ய வேண்டும்.
இந்த தழைகள் விரைவாக மட்க அசஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர்உரங்களை 200 கிராம் என்ற அளவில் எடுத்து மக்கிய குப்பையுடன் கலந்து நாற்றங்காலில் கடைசி உழவின்போது இட வேண்டும். இதனால் தழைகள் விரைவில் மட்கிவிடும்.
நாற்றங்கால் பயிர் பராமரிப்பு
நெல் பயிர் சீராக வளர விதைத்த 10 முதல் 15 நாட்களில் கீழ்க்கண்ட கரைசலை தயாரித்து நாற்றங்காலுக்கு நீர் பாயச்சும்போது சீராகக் கலந்துவிட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முறை 4 முதல் 7 நாள் இடைவெளியில் இக்கரைசலைப் பயன்படுத்தலாம்.
பின்னர் 5 கிலோ மண்புழுக் கழிவு உரம் அல்லது சாணியுடன் 20 லிட்டர் நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இந்தக் கரைசலில் ஆவூட்டம் 200 மிலி முதல் 400 மிலி அல்லது தேங்காய்பால் மோர் கரைசல் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் அத்துடன் 300 மிலி மீன் அமினோ அமிலமும் சூடோமோனஸ் புளுரோசன்ஸ் 50 கிராமும் சேர்த்து 3 நாட்கள் ஊறல் போட்ட பின்னர் தண்ணீர் பாய்ச்சும்போது கலந்துவிட வேண்டும்.
விதைநெல் நேர்த்தி
தேவையான நீரில் உப்பைப் போட்டு அடர்த்தியான கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஒரு நல்ல முட்டையை எடுத்து உப்புக் கரைசலில் போட்டுப் பார்த்தால் அது மிதக்கும். இந்த அளவு கரைசலில் விதை நெல்லைப் போட வேண்டும்.
பதர்களும் சண்டு நெல்லும் மிதந்துவிடும். அவை சரியாக முளைக்காது. அவற்றை நீக்கிவிட வேண்டும். மூழ்கிய நெல் நல்ல முளைப்புத் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அசோஸ்பைரில்லம் முதலிய உயிர்உரங்களைக் போதிய நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
அதில் 24 மணி நேரம் விதை நெல்லை ஊற வைக்க வேண்டும். 2 விழுக்காடு (2%) ஆவூட்டமும் 200 கிராம் சூடோமோனஸ் புளோரோசன்ஸ் சேர்த்த கரைசலில் 15 நிமிடங்கள் நெல்லை ஊறவைத்து எடுக்க வேண்டும்.
பின்னர் ஈரச் சாக்கில் நெல்லைப் போட்டுக் கட்டிய மூட்டையைச் சுற்றி ஈரச்சாக்கைக் கொண்டு மூடிவிடவும். அடுத்த 24 மணி நேரத்தில் நெல் முளைவிடும். பின்னர் நாற்றங்காலில் நெல்லை விதைக்க வேண்டும்.
நாற்றங்காலில் தெற்கு வடக்காகவோ, அல்லது கிழக்கு மேற்காகவோ நன்கு நீர் வடிக்க ஏதுவாக ஒரு அடி அகலம் வைத்து கயிறு பயன்படுத்தி கண்டி அமைக்கவும். நாற்றங்காலில் சீராக நெல் பரவ இது உதவியாக இருக்கும். தண்ணீர் வடிக்கவும் வடிகாலாக இந்தக் கண்டி பயன்படும்.