கைவிடாது குதிரைவாலி…

 |  First Published Nov 12, 2016, 6:02 AM IST



புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை அரிசியே காரணம் என்பதும் நவீன மருத்துவ உலகம் கூறும் முடிவுகள். இதற்கு மாற்றாக இருப்பவை தினை, சாமை, வரகு போன்ற புஞ்சைத் தானியங்கள். எனவே, நகர்ப்புற மேட்டுக்குடி மக்களுக்கான உணவாக இது மெல்ல மெல்ல மாறி வருகிறது.

ஒரு காலத்தில் உடல் உழைப்பாளிகளின் உணவாக இருந்து மேட்டுக்குடிகளால் புறக்கணிக்கப்பட்ட இவை, இன்றைக்கு உடல் உழைப்பாளிகளால் மறக்கப்பட்டு, மேட்டுக்குடிகளின் ‘ரெசிபி’யாக மாறிவருவது, ஒரு வரலாற்று முரண்! எளிய மக்களுக்கும் கிடைக்கும் உணவாக இவற்றை மாற்றினால், உண்மையான பயன் கிடைக்கும்.

Tap to resize

Latest Videos

இந்த முயற்சியில் இறங்கிய முன்னத்தி ஏர்களில் ஒருவர், எளிமையான உழவரான பாண்டி. மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகில் உள்ள வன்னிவேலம்பட்டி என்ற சிற்றூரில் இயற்கைமுறை வேளாண்மையில் ஈடுபட்டு வருபவர் இவர். வழக்கம்போல இயற்கை வேளாண்மைக்குள் வருபவர்களை எள்ளி நகையாடும் நிகழ்வுகள், இவருடைய வாழ்விலும் நடந்தன.

மழையை மட்டுமே நம்பிய தனது இரண்டரை ஏக்கர் வானவாரி நிலத்தில் குதிரைவாலி சாகுபடி செய்திருந்தார். சென்ற ஆண்டு கடுமையான வறட்சி, அவருடைய ஊரில் பெரும்பாலோர் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். இவருடைய குதிரைவாலியும் வறட்சிக்கு இலக்கானது. மக்காச்சோளமோ முற்றிலும் கருகியே போய்விட்டது. அனைவருக்கும் பெருத்த நட்டம். எல்லாரும் நிலத்தை மீண்டும் உழுது போட்டு, அடுத்த பயிர் வைக்கத் தயாராகிவந்தனர்.

ஆனால், குதிரைவாலியின் மீது பாண்டி நம்பிக்கை வைத்திருந்தார். நிலத்தை உழுதுவிடச் சொல்லி மற்றவர்கள் இவரிடம் வற்புறுத்தினர். ஆனால் முற்றிலும் கருகிவிட்ட அந்தப் பயிர், 40 நாட்கள் கழித்துப் பெய்த மழையில் துளிர்விட்டது. பின்னர்ப் பெய்த இரண்டே இரண்டு மழையில் விளைச்சல் தந்தது. நெய்க்கரிசல் நிலத்தின் நீர்ப்பிடிப்புத் தன்மை, பெய்த மழையைச் சொட்டுக்கூட வீணாக்காமல் பயிர்களுக்குக் கொடுத்து விளைச்சலை வழங்கியது. ஏக்கருக்குச் சராசரி 650 கிலோ குதிரைவாலியும் 100 கிலோ துவரம் பயிறும் கிடைத்தன. மக்காச்சோள உழவர்களோ எதையும் அறுவடை செய்யாமல் நிலத்தை உழுது போட்டதுதான் மிச்சம்.

பாண்டி தன்னுடைய மற்றொரு நிலப் பகுதியில், பாசன வசதியுள்ள நிலத்தை வைத்துள்ளார். அதில் நிறைய மரங்களை வளர்க்கிறார். அதில் வரும் தழைகளைக் கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்துகிறார். ஊடே காய்கறி, வீட்டுக்குத் தேவையான நெல் போன்றவற்றையும் சாகுபடி செய்துகொள்கிறார்.

இவருடைய குடும்பத்தில் அனைவரும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். இவருடைய வீட்டில் உள்ள நாற்காலி, கட்டில் முதலிய வீட்டுப் பயன்பாட்டு பொருட்களைக்கூட இவரது நிலத்தில் விளைந்த மரங்களைக் கொண்டே செய்துள்ளார். தற்சார்புள்ள ஒரு எளிமையான உழவர் இவர். மிகச் சிறந்த பாடகர், கவிஞர். இவரே பாடல் புனைவார், இசையமைத்தும் பாடுவார். இயற்கை வேளாண்மை அரங்குகளில் இவருடைய வெங்கலக் குரல் முழங்கும்.

நீண்ட காலமாக இயற்கை வேளாண்மைக்குள் இறங்கி, தொடக்கத்தில் பல சிக்கல்களைச் சந்தித்து இப்போது வெற்றியாளராக மாறியுள்ளார். பிறருக்குக் கற்றும் தருகிறார். இவருடைய நிலம், இயற்கை வேளாண்மைக்குள் வரும் முன்னர் டிராக்டரால் உழுவதற்குக்கூடக் கடினமாக இருந்தது. இப்போது மாட்டைக்கொண்டு உழும் அளவுக்குப் பொலபொலவென மாறிவிட்டது என்று பாண்டி கூறுகிறார்.

குதிரைவாலி பயிரிட ஒரு ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு கிலோ விதை போதும். கோடையில் நிலத்தை நன்கு உழுது பக்குவப்படுத்தி, தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு மழை பெய்தவுடன் சரியான ஈரத்தில் உழும்போதே, விதைத்துவிட வேண்டும். தேவைப்பட்டால் களை எடுத்துக்கொள்ளலாம். பலர் களைகூட எடுப்பது கிடையாது. களையை மீறி வளரும் திறன் கொண்டது குதிரைவாலி.

ஈரம் இருந்தால் ஒருமுறை அமுதக் கரைசல் என்ற ஊட்டக் கரைசலைத் தெளிக்கலாம். மழை குறைவாக இருந்தால் விளைச்சல் 500 கிலோவும், போதிய அளவு இருந்தால் 700 கிலோவும் கிடைக்கும். இப்போது இதன் சந்தை விலை கிலோ ரூ. 15 முதல் 20 வரை; மக்காச்சோளத்தைவிட அதிகம். செலவோ மிக மிகக் குறைவு. சந்தை வாய்ப்பு இப்போது நன்றாக உள்ளது.

காவிரி வடிகால் உழவர்கள் நெல்லுக்குப் பின்னர் ஒரு முறை தண்ணீர்ப் பற்றாக்குறை வரும் காலத்தில், குதிரைவாலி போன்ற அருந்தானியங்களை பயிர் செய்தால் நிச்சயம் அவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

click me!