வெண்டை சாகுபடி...
ரகங்கள்:
undefined
கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி, வர்சா உப்கார்.
மண் – தட்பவெப்பநிலை:
வெண்டை வெப்பம் விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள் இதற்குத் தேவை. பனி மூட்டத்தால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது.
வெண்டையை எல்லா வகை மண்ணிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்ணில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.
விதையளவு:
ஹெக்டேருக்கு 7.5 கிலோ போதும்.
நிலம் தயாரித்தல்:
மூன்று அல்லது 4 முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன் 25 டன் தொழு உரம் இட்டு 45 செமீ இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் (பார்சால்) அமைக்கவேண்டும்.
விதை நேர்த்தி:
விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும்.
நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இதில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும்.
இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செமீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செமீ ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாள்களுக்கு பின் 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களையவேண்டும்.
நீர் நிர்வாகம்:
நட்டவுடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். பிறகு வாரம் ஒருமுறை நீர்ப் பாய்ச்சவேண்டும்.
உரமிடுதல்:
அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். நட்ட 30 நாள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.
2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியம்.
இலைவழி ஊட்டம்:
ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30 நாள்கள் கழித்து 10 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும். மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராம் ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30, 45 மற்றும் 60வது நாளில் தெளிப்பதன் மூலம், விளைச்சலை அதிகப்படுத்தலாம்.
களை நிர்வாகம்:
களைகள் முளைக்கும் முன் விதைத்த 3ஆம் நாள் ஹெக்டேருக்கு ப்ளுக்குளோரலின் 2 லிட்டர் தெளித்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். பிறகு விதைத்த 30ஆம் நாள் கைக்களை எடுக்கவேண்டும்.
அறுவடை:
நட்ட 45 நாள்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றும் முன் அறுவடை செய்யவேண்டும். 2 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்வது அவசியம்.
மகசூல்:
ஹெக்டருக்கு 90 முதல் 100 நாள்களில் 12 முதல் 15 டன் காய்கள் கிடைக்கும்.