இயற்கை வேளாண்மை என்பது இயற்கையின் இதயத்தை இம்சைப்படுத்தாமல் செய்வது, இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது.இயற்கையினுள் செயற்கையை புகுத்தாமல் இயற்கையை இதமாக அதன் போக்கில் விடுவது,இரசாயனத்தைப் புகுத்தி இயற்கையை ரணப்படுத்தாமல் இருப்பது.
undefined
இயற்கை வேளாண்மை என்பது உயிருக்கு தீங்கு விளைவிக்கின்ற இரசாயன உரங்களையோ, வேதியியல் பூச்சிக்கொல்லிகளையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதாகும்.
இயற்கை வேளாண்மைக்கு எனத் தனியாக எந்தவொரு கொள்கைகளும் வகுக்கப்படவில்லை. இயற்கை வேளாண்மையில் முக்கியமானது பயிர் சுழற்சி முறை மற்றும் கலப்பு பயிர்கள் பயிருடுதலாகும்.
“பறவைகளைப் பார்த்து பறக்க கற்றுக்கொண்டோம்
மீன்களைப் பார்த்து நீந்த கற்றுக்கொண்டோம்
இயற்கையை ஆழ்ந்து கவனித்தாலே இயற்கை வேளாண்மையை கற்றுக்கொள்வோம்”.
இயற்கை வேளாண்மை என்பது “இயற்கையின் சுழற்சிகளை மையமாக கொண்டு செயல்படும் வேளாண்மை முறை” இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது தான் இயற்கை வேளாண்மை. காட்டிலுள்ள மரங்களை பார்த்தாலே இயற்கை வேளாண்மையை கற்று கொள்ளலாம்.
காட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை, உழுவதும் இல்லை, களைஎடுப்பதும் இல்லை அவை தானாகவே வளருகின்றன. அதன் நல்வளர்ச்சிக்கு காரணம் நல்ல வளமான மண் அங்கு இருப்பதேயாகும்,
மேலும் மரங்களிலிருந்து விழும் இலை தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடாக்காகி மண்ணிற்கு ஈரப்பதத்தை கொடுகின்றது, இது தான் இயற்கை வேளாண்மையின் அடிப்படை
நாமும் இதே போல “ஏதும் செய்யாத வேளாண்மை”யை செய்யலாம், ஆனால் இன்றிருக்கும் நிலையில் நம் மண் வளம் தரமற்றதாகிவிட்டது, மலடாகிய மண்ணை நல்ல மகசூல் கிடைக்கும் மண்ணாக மாற்ற நாம் சில தொழில்நுட்பங்களை இயற்கை வேளாண்மையில் புகுத்த வேண்டும்.
அவை பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாகும். மேலும் ஒற்றை நாற்று நடவு, மூடாக்கி போடுதல், உரக்குழிகள் வெட்டுதல், பயிர்களுக்கு இடையே காற்றோட்டத்தை பராமரிப்பது, நாட்டு விதைகளை பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பங்களும் இயற்கை வேளாண்மையுடன் இணைந்ததே.