திருப்பூர்:எலி, அணில்களிடம் இருந்து, தேங்காய்களை காப்பாற்ற, தென்னை மரங்களுக்கு அலுமினியத்தில் வளையம் அணிவித்து, புதிய வழிமுறையை விவசாயி, அறிமுகப்படுத்தி உள்ளார்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்னை மரத்தில் உள்ள குரும்பைகளை எலிகள் மற்றும் அணில்கள் கடித்து, சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தேங்காய், காய் பிடிக்காது.
இதற்கு தீர்வு காணும் பொருட்டு, திருப்பூர், மாணிக்காபுரத்தை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியம் என்பவர், தென்னை மரங்களில், இரண்டு அடி உயரத்துக்கு, அலுமினியத்தால் செய்யப்பட்ட வளையத்தை, மரத்தை சுற்றிலும், பட்டையாக மாட்டினார். இதனால், மரத்தில் போதிய பிடிப்பு கிடைக்காமல், வழுக்கு வதால், மர எலி, அணில் உள்ளிட்டவை மேலே ஏற முடியாது. அலுமினியத்தில், இவை அமைத்த பின், தற்போது, தேங்காய்களை காப்பாற்ற முடிகிறது.
விவசாயி பாலசுப்ரமணியம் கூறியதாவது:
எலி, அணில்களால், ஒரு மரத்தில் கிடைக்கும் காய்களில், நான்கில் ஒரு பங்கு, வீணாகிறது. ஒரு சில மரங்களில் ஓட்டை அமைத்து, குருத்தையும் சாப்பிட்டு விடுகின்றன. இதற்கு தீர்வு காண, அலுமினிய, ‘ஷீட்’ வாங்கி, இரண்டு அடி உயரம் என்ற அளவில், மரத்துக்கு, காயம் ஏற்படாமல், ஆணி அடித்து, வளையம் போல் பொருத்தினோம். இதனால், எலி, அணில்களால் மரத்தின் மேல் ஏற முடிவதில்லை. தற்போது, ஒரு குரும்பை கூட கீழே விழுவதில்லை. முழு மகசூல் கிடைக்கிறது.
தேங்காய் பறிக்க, தற்போது பெரும்பாலும் யாரும் மரம் ஏறுவது இல்லை. இதற்கான ஏணி வைத்துள்ளேன். இவ்வாறு பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.