வீடுகளில் அடுக்கு முறையில் உளுந்து, துவரை செடிகள், இயற்கை முறை முள்ளங்கி, எள்செடிகள் வளர்ப்பு குறித்த ஆராய்ச்சியில் மதுரை விவசாய கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.உழவியல் துறைத்தலைவர் சாமிநாதன், உதவி பேராசிரியர் சத்தியமூர்த்தி வழிகாட்டுதலில் நான்காம் ஆண்டு மாணவர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் கூறியதாவது:
மண்ணில்லாமல் முள்ளங்கி
சரவணன்: மட்கிய தென்னை நார், வண்டல் கழிவு, இலைச்சருகு, மண்புழு உரம், தொழுஉரம், ஆட்டுகழிவுகளை வெவ்வேறு விகிதங்களில் கலந்து 20 தொட்டிகளில் முள்ளங்கி வளர்க்கிறேன். தற்போது வரையான ஆராய்ச்சியில் ஆட்டுக்கழிவுகள் அதிகம் கலந்த தொட்டியில் முள்ளங்கிகள் நன்றாக வளர்கின்றன.
சந்தியா: மா, மஞ்சநத்தி, முருங்கை, நெல்லி, நாவல், சித்தா, வில்வம் மற்றும் காகிதப்பூ இலைகளில் இருந்து சாறு எடுத்து எள் விதைகளை விதைநேர்த்தி செய்தேன். தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒரு முறை இலைச்சாற்றை பயிர்களில் தெளித்து வருகிறேன். தனிச்சாறு, இரண்டு இலைகளின் சாறு கலவையை கொண்டு எள்செடியின் வளர்ச்சியை கண்காணிக்கிறேன். மாஇலை சாறு தெளித்த எள் செடிகள் நன்றாக வளர்ந்துள்ளன.
அடுக்கு முறையில் உளுந்து
மோகன்ராஜ்: சுதந்திரத்திற்கு முன் தனிமனிதன் சாப்பிட்ட பயறு அளவு நாள் ஒன்றுக்கு 65 கிராம். தற்போது 42 கிராம் ஆக குறைந்துள்ளது. உற்பத்தி மற்றும் தேவை அதிகரித்துள்ளதால் நிலத்தை நம்பியிருக்காமல் வீட்டிலும் உற்பத்தி செய்யலாம்.
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஆண்டுக்கு 70 – 75 கிலோ பயறு தேவைப்படும். அதை உற்பத்தி செய்வதற்கு 21 சென்ட் நிலம் வேண்டும். வீடுகளில் அடுக்கு முறையில் ஒரு சென்ட் இடத்தில் 2 – 3 போகமாக உற்பத்தி செய்யலாம்.பிளாஸ்டிக் பைப்பில் பக்கபகுதியை வெட்டி எடுத்து அதில் மண் நிரப்பி சட்டத்தில் வைத்து முன், பின்னாக கட்ட வேண்டும். இதில் பயறு விதைகளை துாவி, தண்ணீர் தெளிக்க வேண்டும்.
உளுந்தம்பயறின் விதை அதிகபட்சமாக 15 செ.மீ., அளவு தான் கீழ் இறங்கும். எனவே பிளாஸ்டிக் பைப் போதுமானது. ஒரே சட்டத்தில் ஐந்து வரிசையில் பைப் வைத்து கட்டினால் இடப்பற்றாக்குறையை தவிர்க்கலாம்.துவரம் பயறின் விதை ஓரடி ஆழம் வரை செல்லும் என்பதால் தனித்தனி பைப்களில் வைத்து வளர்க்கலாம்.
இம்முறையில் வீட்டுத்தேவையை நிறைவேற்றமுடியும், என்றார்.