முருங்கையை நல்ல முறையில் பராமரித்தால் 8 ஆண்டுகள் வரை நல்ல மகசூல் பார்க்கலாம்…

 |  First Published Jun 14, 2018, 1:41 PM IST
Maintain good manure for 8 years



முருங்கை சாகுபடி

** நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்து, 15 நாள் காயவிட வேண்டும். 

Latest Videos

** பிறகு டிரில்லரால் ஒரு உழவு செய்து அடுத்த நாள் செடிக்கு செடி 20அடி இடைவெளியில், ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். 

** ஏக்கருக்கு 100 குழிகள் வரை எடுக்கலாம். முருங்கையை போத்தாக நடவு செய்தால் விரைவாக மகசூலுக்கு வரும்.

** நன்றாக வளர்ந்த முருங்கை மரத்தில் இருந்து, ஒன்றரை அடி உயரத்தில் போத்துகளை வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 

** ஒரு பாத்திரத்தில் 100 லிட்டர் தண்ணீர் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து கொள்ள வேண்டும். 

** போத்துகளில், எந்த முனையை மண்ணுக்குள் நடவு செய்யபோகிறோமோ, அதை அரை அடி அளவுக்கு பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து எடுத்து பத்து நிமிடம் நிழலில் வைத்து பிறகு, குழிக்குள் நடவு செய்ய வேண்டும். இதனால் வேர் வளர்ச்சி தடைபடாமலும், வேர்ப்பகுதி அழுகாமலும் இருக்கும். 

** நடவுக் குழிக்குள் அரை கிலோ அளவு மட்கிய சாணத்தைப் போட்டு அதில் போத்து பாதியளவு குழிக்குள் மூழ்குமாறு நடவு செய்து மண் அணைத்து முதல் நீர் விட வேண்டும். பின் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.

** நடவு செய்த அடுத்த நாள் பசுஞ்சாணத்தை மருதாணி வைப்பது போல் போத்துக்களின் நுனியில் ஒரு இஞ்ச் அளவுக்கு சுற்றிலும் வைக்க வேண்டும். 10 முதல் 15-ம் நாளில் தளிர் தெரியும். 

** 30-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யாவை தெளிக்க வேண்டும்.

** 6-ம் மாதத்தில் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பாசிப்பயறு 5 கிலோ, தட்டைப்பயறு 5 கிலோ, கொள்ளுப்பயறு 5 கிலோ, கொண்டைக்கடலை ஆகியவற்றை மாவாக திரிக்க வேண்டும். இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிவிடவும். 

** பின்னர் டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் இதை இரண்டு நாள் வரை வைத்திருந்து, ஒரு குழிக்கு 2 லிட்டர் அளவு தூரில் ஊற்றி மண் அணைக்க வேண்டும். இதனால் பூ உதிராமல் காய் பிடித்து நன்கு வளரும்.

** குளிர் காலத்தில் கம்பளிப்பூச்சி தாக்குதல் இருக்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்ப எண்ணெய், 200 கிராம் வசம்புப் பொடி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 

** வருடம் ஒருமுறை மழை நேரத்தில், மரத்தில் இருப்பதிலேயே உயரமான கம்பை வெட்ட வேண்டும். அதில் கட்டை காய்கள்தான் வரும். காய்கள் உச்சிக்குப் போனால் பறிக்க முடியாது. தவிர அதிக காற்று வீசும்போது மரம் முறிய வாய்ப்பு உள்ளது. 

** எனவே, உயரமான கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதனால், கிளைகள் வளர்ந்து அதிக பூ பூத்து காய்பிடிக்கும். நல்ல முறையில் பராமரித்தால் 8 ஆண்டுகள் வரை கூட நல்ல மகசூல் பார்க்கலாம்.

click me!